விமர்சனம்

வதந்தி 2 – இணையத்தொடர் விமர்சனம்

2022 டிசம்பரில் வெளியான இணையத் தொடர் வதந்தி.ஓர் இளம்பெண் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்படுகிறார். அவர் இறந்தது எப்படி? எதனால்? என்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிப்பதுதான் எட்டு பாகங்கள் கொண்ட வதந்தி இணையத் தொடர்.
மர்மமான முறையில் இறந்த நாயகி வெலோனி எனும் பெயர் கொண்ட சஞ்சனாவின் வழக்கை விசாரிக்க வரும் உதவி ஆய்வாளர் வேடத்தில் நாயகன் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார்.

இப்போது அந்தத் தொடரின் இரண்டாம்பாகமாக வந்திருக்கிறது வதந்தி 2 இணையத் தொடர்.

இந்தத் தொடரில்,மதுரை மாவட்டத்தில்,அரசு நிகழ்ச்சி ஒன்றுக்காக பள்ளம் தோண்டும்போது எலும்புக்கூடுகள் கிடைக்கின்றன.அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்கள் மற்றும் குற்றவாளி யார்? என்பதைக் கண்டுபிடிக்கக் களமிறங்குகிறார் உதவி ஆய்வாளர் சசிகுமார்.அந்த விசாரணையில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை விறுவிறுப்பாகச் சொல்ல முயன்றிருப்பதே வதந்தி 2.

முதன்முறையாக காவல்துறை உதவி ஆய்வாளர் வேடத்தை ஏற்றிருக்கிறார் சசிகுமார்.அந்த வேடத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமெனில் தோற்றம் மட்டும் போதாது அந்த வேடத்தை மனதில் முழுமையாக ஏற்றி வெளிப்படுத்த வேண்டும் என உணர்ந்து நடித்திருக்கிறார்.அது அவருக்கும் தொடருக்கும் வலுச்சேர்த்திருக்கிறது.

சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் அபர்ணாதாஸ் கவனம் ஈர்க்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மதுரைமாவட்ட காவல்கண்காணிப்பாளராக நடித்திருக்கும் அனகா,அதற்கேற்ற மிடுக்குடன் நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

அறிமுக நடிகர் யஷ்வந்த்,மாடு பிடிப்பதில் ஆர்வம்காட்டும் மதுரை இளைஞராக நடித்து கவனம் பெறுகிறார்.யஷ்வந்த்தின் காதலியாக நடித்திருக்கும் ரேவதி நன்று.

வதந்தி முதல்பாகத்தின் தொடர்ச்சி என்பதை உறுதிப்படுத்த,முதல்பாகத்தில்,ராமர் கதாபாத்திரத்தில் நடித்த விவேக் பிரசன்னா,இதிலும் அதே கதாபாத்திரம் ஏற்று பொருத்தமாக நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமி,விசாரணைக் கதைகளுக்கேற்ற காட்சிகள்,ஒளியமைப்பு ஆகியனவற்றைக் கையாண்டு காட்சிகளை இலகுவாக்கியிருக்கிறார்.

சைமன் கே.கிங் பின்னணி இசையில் தொடரின் காட்சிகள் முன்னணிக்கு வந்திருக்கின்றன.

படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ,இணையத் தொடர்களுக்கேற்ப தொகுத்து ஒவ்வொரு பகுதிக்கு அடுத்து என்ன? என்று எதிர்பார்க்க வைத்திருக்கிறார்.

கலை இயக்குநர் மீவின்னின் பணி மிகமுக்கியமானது.அதனால் காட்சிகள் உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கின்றன.

எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரு லூயிஸ்.இதுபோன்ற விசாரணைக் கதைகள் இப்படித்தான் இருக்கும் என்கிற இலக்கணங்களை ஜல்லிக்கட்டுப் போட்டி உட்பட சில விசயங்களைச் சேர்த்து உடைத்திருக்கிறார்.எல்லோரும் ஆர்வமாகப் பார்க்கிற மாதிரி படமாக்கியிருக்கிறார்.தண்டனை பெறவேண்டியவர்களைத் தேடும் முயற்சியிலிருந்து மாறுபட்டு தண்டனை அடைந்த நிரபராதியை மீட்கும் திரைக்கதை அமைத்து வரவேற்புப் பெறுகிறார்.

– இளையவன்

Related Posts