போட்டோகிராபர் – திரைப்பட விமர்சனம்
பயணக்கதைகள் சுவையானவை.அதுவும் அடர்ந்த வனத்துக்குள் அரியமரம் ஒன்றைத்தேடிப் பயணிக்கும் ஒரு புகைப்படக்காரரின் திகில் பயணம் மேலும் சுவாரசியமானது.அப்படி ஒரு கதைகளத்தைக் கொண்டு வெளியாகியிருக்கும் படம் போட்டோகிராபர்.
அரியமரத்தைப் படமெடுக்கச் செல்லும் புகைப்படக்காரர்,வழிதவறி ஆபத்து நிறைந்த வனப்பகுதிக்குள் சிக்கிக்கொள்கிறார்.யாரும் திரும்பி வரமுடியாத,ஆபத்தான அந்த வனப்பகுதியில் இருந்து வெளியேற வழிதெரியாமல் தடுமாறும் நாயகன் அஷ்ரப்,அங்கிருத்து தப்பித்தாரா?புகைப்படம் எடுக்க நினைத்த மரத்தை எடுத்தாரா? இல்லையா? ஆகிய வினாக்களுக்கான விடைகள்தாம் படம்.
நாயகனாக நடித்திருக்கும் அஷ்ரப்புக்கு இது முதல்படம் என்று சொன்னால்தான் தெரியும் எனுமளவுக்கு நடித்திருக்கிறார்.திடுக்கிடும் காட்சிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் அவருடைய நடிப்பு அமைந்திருக்கிறது.தொடக்கக் காட்சிகளில் கொஞ்சம் முன்பின்னே இருந்தாலும் அடுத்தடுத்து குறிப்பாக, இரண்டாம்பாதியில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஜனனிசாமிநாதனுக்கு பெரிய வேலையில்லை.அதிகம் காட்சிகள் இல்லை.ஆனாலும் அவர் வரும் காட்சிகள் நிறைவு.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன்,அம்மாவாக நடித்திருக்கும் தேவி மகேஷ்,நண்பர்களாக நடித்திருக்கும் கருணாகரன்,உறியடி சிவா ஆகியோரும் ஏற்றுக்கொண்ட வேடங்களுக்கேற்ப நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்களுக்கு உற்சாகமூட்டும் கதைக்களம் என்பதால் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரயீஸ் அஹ்மத் கூடுதல் ஈர்ப்புடன் பணியாற்றியிருக்கிறார் என்பது காட்சிகளில் புலனாகிறது.கணினி வரைகலைக் காட்சிகளும் படத்துக்குக் கூடுதல் பலம்.
ராஜ்குமார் சந்திரசேகரன் இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் இயல்பாக அமைந்திருந்தாலும்,இந்தப்படத்தின் காட்சிகளுக்கு உயிரூட்டுவது நம்முடைய வேலை என்பதை உணர்ந்து பின்னணி இசைச்சேர்ப்பில் பணியாற்றி காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறார்.
ஆர்.சி.பிரணவ் படத்தொகுப்பில் முதல்பாதியில் சில குறைகள் இருந்தாலும் இரண்டாம்பாதியில் அதை சமன் செய்துவிடுகிறார்.
சண்டைப் பயிற்சி இயக்குநர் தினேஷ் சுப்பராயன்,புதுநாயகன் அஷ்ரப்புக்கு ஏற்றவாறு ஆக்சன் காட்சிகளை அமைத்து அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.
ஒரு புகைப்படக்காரரின் பயணம் என்று மேலோட்டமாக வைத்துக்கொண்டு,தனிமனித உணர்வுகள்,உயிர்வாழும் போராட்டம்,நெருக்கடிக் காலங்களில் மனிதர்களின் ஆற்றல் ஆகிய பல்வேறு விசயங்களை உள்ளே வைத்து ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அஷ்ரப்.ஆம்,கதாநாயகனாக நடித்திருக்கும் அஷ்ரப்பேதான்.
– இளையவன்











