விமர்சனம்

பாலா பாஸானாரா? – நாச்சியார் விமர்சனம்

எளிய மனிதர்கள், பணம், புகழ், செல்வாக்கு ஆகியனவற்றில் வலியவர்களின் விளையாட்டு பொம்மைகள். அவர்களுக்கு எந்த ஆசாபாசங்களும் சிந்தனைகளும் இருக்கக்கூடாது, அவர்கள் உயிரிழந்தாலும் அதுபற்றிக் கவலைப்படத்தேவையில்லை என்கிற மேட்டிமைத்தனத்தினரின் அடாவடியைச் சுட்டிக்காட்டி அவற்றின் செவிட்டில் அறையும் பாலாவின் முயற்சிதான் நாச்சியார்.

ஓர் அப்பாவிப்பெண், பதினெட்டு வயது நிரம்பாத பெண் கருவுற்று குழந்தை பெறுகிறார். அந்தக் குழந்தையின் தந்தை யார்? என்பதை விசாரித்து உணமையைக் கண்டறிவது என்கிற மெல்லிய கதையை வைத்துக்கொண்டு, அதற்குள், கடவுள், சாதி,மதங்கள், அதிகாரத்திமிர்கள் ஆகிய எல்லாவற்றையும் சாடியிருக்கிறார் பாலா.

படத்தின் தலைப்பில் இடம்பிடித்தது போலவே படம் முழுவதும் இடம்பிடித்திருக்கிறார் ஜோதிகா. காவலதிகாரியாக மிடுக்குடன் நடப்பது, ஒரு பெண் குழந்தையின் தாயாக நெகிழ்ந்து பேசுவது, பாதிக்கப்பட்ட அப்பாவிப்பெண்ணின் குழந்தையைக் குளிப்பாட்டும் கனிவு என்று பல்வேறு குணங்களையும் வெளிப்படுத்துகிற அழுத்தமான வேடத்தை அநாயசமாகச் செய்து பாராட்டுப் பெறுகிறார் ஜோதிகா.

நிறையப்படங்கள் நாயகனாக ஜீ.வி.பிரகாஷ்நடித்திருந்தாலும் இந்தப்படம்தான் அவருக்கு முதல்படம் போல. அவ்வளவு நன்றாக நடித்திருக்கிறார். தப்புப் பண்ணீட்டிங்க மேடம் என்று ஜோதிகாவிடம் கண்ணீர் விடுகிற நேரத்தில் உயர்ந்து நிற்கிறார்.

ஜீ.வி.பிரகாஷின் காதலியாக நடித்திருக்கும் இவானா எளிமையான அழகு. நடிப்பும் சிறப்பு.

காவலதிகாரியாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் ராக்லைன்வெங்கடேஷ், எதார்த்தமான நடிப்பினால் நிறையப் படங்களில் நடித்தவர் போலத் தெரிகிறார்.

சாமிக்கெல்லாம் பொழுது போக வேணாமா?, யானை நடந்தால் எறும்புகள் நசுங்கத்தான் செய்யும், யானை காதில் எறும்பு நுழைஞ்சா யானைக்குப் பைத்தியமே பிடிச்சுடும், ஆணவக்கொலை செய்கிற ஆளுங்ககிட்ட உங்க ஆத்திரத்தக் காட்டுங்க உள்ளிட்ட பல சின்னச்சின்ன வசனங்கள் மூலம் பெரிய பெரிய விசயங்களைப் பேசியிருக்கிறார் பாலா.

ஜோதிகாவின் மகள் வேடத்தின் மூலம் உயர்நடுத்தர வர்க்கம் மற்றும் உயர் வர்க்கத்தினர் வீடுகளில் தாய்மொழி தமிழுக்கு இடமில்லாமல் போய்க்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

நேர்மையான உண்மையான அதிகாரி ஜோதிகா, விசாரிக்காமலே ஒருவரைத் துன்புறுத்துகிறார் என்பது நெருடலாக இருக்கிறது.

மிகப்பெரும் குப்பைக்கிடங்கிலிருந்து பயணத்தைத் தொடங்கும் ஈஷ்வரின் ஒளிப்பதிவு, அப்படியே தொடர்ந்து கூவத்தைக்காட்டி அதன்பின் இருக்கும் கான்கிரீட் காடான நகரத்தைக் காட்டும் தொடக்கக் காட்சியிலேயே சிறப்பு. அதில் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் பாலா.

சீர்கெட்டுக் கிடக்கும் சமூகத்தை கொடும் தண்டனை கொடுத்துத்தான் சரி செய்யவேண்டும் என்று சொல்கிறார் பாலா. அது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்றாலும் நாச்சியாரின் மிடுக்கு ஈர்க்கிறது.

Related Posts