September 7, 2024
விமர்சனம்

ஜாஸ்பர் – திரைப்பட விமர்சனம்

நிழலுக தாதாவாக இருக்கும் ஜாஸ்பர், தன் மனைவி கொல்லப்பட்டதும் அந்தத் தொழிலை விட்டு ஒதுங்கி வாழ்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அருகே உள்ள வீட்டில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் கடத்தப்பட்டதும் மீண்டும் களமிறங்குகிறார்.

அது எதனால்? என்பதும் அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் ஜாஸ்பர்.

தற்கால ஜாஸ்பர் வேடத்தில் சி.எம்.பாலாவும் இளவயது ஜாஸ்பராக விவேக்ராஜகோபாலும் நடித்திருக்கிறார்கள். இருவருமே உடல்மொழியில் ஆவேசத்தைக் காட்டி வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்கள்.அவர் உடலில் இருக்கும் ஒரு நோயே அவரை சூப்பர்மேன் என்று ஆக்கிவிடுகிறது. அது திரைக்கதைக்கும் பலமாக அமைந்திருக்கிறது.

ஐஸ்வர்யாதத்தாவின் வேடம் நன்று. அவருடைய மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.ஜாஸ்பரின் மருமகளாக நடித்திருக்கும் லாவண்யாவும் வேடத்தை உணர்ந்து அழுதுதீர்க்கிறார்.

மணிகண்டராஜாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கதைக்கேற்ப அமைந்து இயக்குநருக்கு உறுதுணையாக இருக்கிறது.

இசையமைத்திருக்கிறார் குமரன்சிவமணி. டிரம்ஸ் சிவமணியின் மகன். இந்தக் கதைக்குப் பின்னணி இசையின் தேவை அதிகம் என்பதை உணர்ந்து இசையமைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் டி.யுவராஜ் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்வதில் முனைப்பு காட்டியிருக்கிறார்.கதாநாயகன் பாத்திரம் வில்லன் பாத்திரம் ஆகியனவற்றை எழுதியதிலேயே படம் பாதி வெற்றி பெறுகிறது.

அந்த வேடங்களைச் சிறப்பாகச் செய்து சி.எம்.பாலாவும் விவேக்ராஜகோபாலும் மீதி வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள்.

Related Posts