சினிமா செய்திகள்

அசோக்செல்வனின் புதியபடம் தொடக்கம் – அவரே தயாரிப்பது ஏன்?

நடிகர் அசோக் செல்வன் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக்லைஃப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.இதற்கடுத்து அவர் நடிப்பில் தயாராகும் அடுத்த திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது.

இப்படம் அசோக்செல்வனின் 23 ஆவது படமாம்.அதனால் இப்படத்தின் பெயர் அறிவிப்புக்கு முன்பாக இப்படத்தை அவர் பெயரிலேயே அதாவது, ஏஎஸ் 23 (AS 23) என்று சொல்கிறார்கள்.

அதுகுறித்த செய்திக்குறிப்பு….

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அஷோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ எனும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற திரைப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா எழுதியிருக்கிறார். இந்தப் படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு நீளப் பொழுதுபோக்குச் சித்திரமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தை ஹாப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures) சார்பில் தயாரிப்பாளர்கள் அஷோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

‘ஓ மை கடவுளே’ எனும் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை வழங்கிய நிறுவனத்தின் இரண்டாவது படைப்பு இது என்பதாலும், ‘போர் தொழில்’ பட புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதி இருப்பதாலும், ‘#AS23 ‘ படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே இரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் பெயரில் அசோக் செல்வன் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.இன்னொருவர் அவருடைய சகோதரி.அவர்கள் இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இந்தப்படத்தை முதல்பிரதி அடிப்படையில்தான் தயாரிக்கிறார்களாம்.

இந்தப்படத்துக்கு முதலீடு செய்வது ஐங்கரன் இண்டர்நேசனல் நிறுவனம் தான் என்று சொல்லப்படுகிறது.பிரபல விநியோக நிறுவனமாகச் செயல்பட்டு வரும் அந்நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது.அப்போது தாமே தயாரித்துத் தருவதாக அசோக்செல்வன் கூறியிருக்கிறார். கதாநாயகனே தயாரிப்புப் பொறுப்பையும் ஏற்றால் படம் வேகமாகவும் நேர்த்தியாகவும் தயாராகிவிடும் என்பதால் அவரிடமே தயாரிப்புப் பொறுப்பைக் கொடுத்துவிட்டார்களாம்.

Related Posts