முத்தையா அருள்நிதி இணையும் படம் தாமதம் – ஏன்?
அருள்நிதி இப்போது தகராறு பட இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா தயாரிப்பில் புதிய இயக்குநர் விஜயரங்கன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றோடு பேசன் ஸ்டியோஸ் தயாரிப்பில் என்னங்க சார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபுஜெயராம் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவற்றைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார்.அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
அப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதமே தொடங்கும் என்று சொல்லப்பட்டது.ஆனால் சொன்னபடி நடக்கவில்லை.மறுபடி இந்த மாதம் தொடங்கிவிடும் என்றார்கள்.அப்படியும் நடக்கவில்லை.இப்போது அக்டோபரில் கண்டிப்பாகத் தொடங்கிவிடும் என்கிறார்கள்.
இயக்குநர் முத்தையா வேகமாகப் படமெடுக்கக் கூடியவர்.அவருடைய படம் இப்படித் தாமதமாக என்ன காரணம்? ஒருவேளை படம் கைவிடப்பட்டுவிட்டதா? என்று விசாரித்தால் உண்மை வேறாக இருக்கிறது.
அது என்ன?
என்னங்க சார் உங்க சட்டம் பட இயக்குநர் பிரபுஜெயராம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் அருள்நிதி.அந்தப்படத்துக்காக ஒரு பிரத்யேக தோற்றத்தில் இருக்கிறாராம்.அந்த தோற்றத்தோடு இன்னொரு படத்தில் நடிக்க முடியாது என்பதால் அந்தப்படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு முத்தையா படத்துக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார்.
ஆனால், இயக்குநர் பிரபுஜெயராமோ திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறாராம்.ஜூலை மாதமே மொத்தப் படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று அவர் சொல்லியிருந்தாராம். ஆனால் ஆகஸ்ட் செப்டம்பர் ஆகியும் படப்பிடிப்பு முடிந்தபாடில்லை.இப்போது இன்னும் பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறாராம்.
இதனால் அருள்நிதி மட்டுமின்றி அந்தப்படத்தில் நடிக்கும் இயக்குநர் பாலாஜிசக்திவேல் உள்ளிட்டு அனைத்து நடிகர்களும்,இவர் இப்படி எடுத்துக்கொண்டே இருக்கிறாரே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.
ஆனாலும்,பிரபுஜெயராம் சொல்லவிருக்கும் கதை நிச்சயம் வரவேற்புப் பெறக்கூடிய கதையாக இருக்கும் என்கிற நம்பிக்கை காரணமாகவும்,படம் தொடங்கி முடிவடையும் தருவாயில் இருப்பதாலும் யாராலும் எதுவும் வெளிப்படையாகப் பேச முடியவில்லை என்கிறார்கள்.
இந்தக் காரணத்தால்தான் முத்தையா இயக்கத்தில் அருள்நிதி நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பும் தள்ளிப்போகிறதாம்.
படப்பிடிப்பு தாமதமாகலாம் படம் வெளியீடும் தாமதமாகலாம் ஆனாலும் இறுதியில் அப்படம் வெற்றி என்றால் அதுதான் நின்றுபேசும் என்கிற உண்மை காரணமாக அதிருப்திகள் வெளிப்படையாக வெளியாகவில்லை.












