பதவிக்காகப் பொய் சொல்வதா? – பாக்யராஜ் வாக்குறுதியால் சர்ச்சை
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான தேர்தல் பிப்ரவரி 27 அன்று நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஓர் அணியும் கே.பாக்யராஜ் தலைமையில் ஓர் அணியும் போட்டியிடுகிறது.
இந்தத் தேர்தலுக்காக,கே.பாக்யராஜ் தலைமையிலான அணியினர் கொடுத்துள்ள வாக்குறுதிகளில் சில சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அதுதொடர்பாக கே.பாக்யராஜுக்கு எழுதியுள்ள திறந்தமடல் …..
அன்புள்ள
திரு. கே. பாக்யராஜ் அவர்களுக்கு வணக்கம்
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில்
அறுபது (60) வயதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு,
இரண்டாயிரம் (2000) ரூபாய் ஒய்வு ஊதியம் தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளீர்கள்.
நான்கு (4) வருடங்களுக்கும் மேலாக,நீங்கள் தலைவராக உள்ள எழுத்தாளர்கள் சங்கத்தில்,
*ஒரே ஒரு ஜீவனுக்கு கூட இதுவரை பென்ஷன் வழங்காத நீங்கள்,
எங்கள் சங்கத்தில் இரண்டாயிரம் (2000) ரூபாய் பென்ஷன் தருவதாக ஏன் பொய்யான தேர்தல் வாக்குறுதி தருகறீர்கள்?
சுமார் 500 பேர்கள் மட்டுமே உள்ள எழுத்தாளர்கள் சங்கத்திலேயே ஒரு தலைவராக சாதிக்க முடியாத நீங்கள்,
கிட்டத்தட்ட மூவாயிரம் (3000) பேர்கள் உறுப்பினர்களாக உள்ள எங்கள் இயக்குநர்கள் சங்கத்தில் எப்படி சாதிப்பீர்கள்?
முதலில் எங்கள் இயக்குநர்கள் சங்கத்தில் அறுபது
(60) வயதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா?
60 வயதைக் கடந்த வர்கள் 400 பேர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு மாதம் இரண்டாயிரம் (2000) ரூபாய் பென்ஷன் தருவதென்றால்,
ஒரு மாதத்திற்கு ரூபாய் எட்டு (8) லட்சம் தேவைப்படும். அதற்கு வருடத்திற்கு சுமார் ஒரு (1) கோடி ரூபாய் ஆகும். வருடத்திற்கு ஒரு(1)கோடி ரூபாய் வட்டி வரவேண்டும் என்றால், வங்கியில் பதினாறு (16) கோடி ரூபாய் பிக்ஸட் டெப்பாஸிட் இருக்க வேண்டும்.
எழுத்தாளர்கள் சங்கத்தில்
நான்கு (4) வருடத்தில் தங்கள் மூலம் ஒரே ஒரு பைசா கூட நிதி திரட்ட இயலாத நீங்கள்,
எங்கள் சங்கத்தில் மட்டும் எப்படி 16 கோடி ரூபாயை திரட்டுவீர்கள்?
எப்படி பென்ஷன் கொடுப்பீர்கள்? கதை சொல்லாதீர்கள்.
சினிமாவில் மட்டுந்தான் கதை வெல்லும்… திரைக்கதை வெல்லும்… ஆனால், சங்கத்தில் உண்மை மட்டுமே வெல்லும்.
இருக்கின்ற மரியாதையை பதவிக்காக பொய் சொல்லி கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
இவ்வாறு அந்த மடலில் கூறப்பட்டுள்ளது.











