சினிமா செய்திகள்

மாஸ்டர் விழா விஜய் பேச்சு ரசிகர்கள் ஏமாற்றம்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளீயீட்டுவிழா நேற்று மாலை நடந்தது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்ற போது படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தனர். அச்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் விஜய் வீட்டில் சோதனைகள் நடந்தன. இந்தப்படத்தின் பாடல்விழா நடக்கிற செய்தி வெளீயே வந்ததும் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார் வருமானவரித்துறையினரின் சோதனைக்கு ஆட்பட்டார்.

விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கிலேயே இந்தச் சோதனைகள் நடைபெற்றதாகச் சொல்லப்பட்டது.

இதனால், மாஸ்டர் பாடல்கள் வெளீயீட்டுவிழா செய்தி வெளியானதும் பரபரப்பு ஏற்பட்டது. இவ்விழாவில் ஆட்சியாளர்களுக்கு விஜய் சூடான பதில் கொடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர் பேச்சில் அதுபற்றி எதுவும் குறிப்பிடவில்லை. பேசி முடித்தபின் அவரிடம் நெய்வேலி நிகழ்வு பற்றிக் கேள்வி கேட்டபோதும், நெய்வேலி அனுபவத்தின் போது மக்கள் ஆதரவு மறக்க முடியாதது வேற லெவல் என்று மட்டும் சொன்னார்.

அதன்பின், நீங்கள் 20 வருடத்துக்கு முந்தைய வாழ்க்கைக்குச் சென்றால், அப்போதைய விஜய்க்கு என்ன அறிவுரை சொல்வீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த விஜய், ரெய்டு எல்லாம் இல்லாத அமைதியான வாழ்க்கை வேண்டும் என்று கேட்பேன். இப்போதும் நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். உண்மையாக இருக்கவேண்டும் என்றால் சில நேரம் ஊமையாகவும் இருக்க வேண்டும் என்று பதில் அளித்தார்.

வருமானவரித்துறை அடாவடியாக நடந்து கொண்டது பற்றியும் அதைத் தொடர்ந்து விஜய் மற்றும் அவரைச் சார்ந்தோருக்கு வருமானவரித்துறை தொல்லை கொடுத்தது பற்றியும் சூடாகப் பதில் சொல்லாமல் மென்மையாகப் பேசிச் சென்றதால் அவருடைய ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Related Posts