ஹாய் படம் தள்ளிப்போகிறது – ஏன்?
பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஹாய்’.இப்படத்தில் நயன்தாரா,கவின்,கே.பாக்யராஜ், ராதிகா சரத்குமார்,பிரபு,விடிவி கணேஷ்,சத்யன்,அமிர்தா சீனிவாசன்,ஆதித்யா கதிர்,பெப்சிவிஜயன்,காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார்.படத்தொகுப்புப் பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள,கலைஇயக்கத்தை எஸ்.கண்ணன் கவனித்திருக்கிறார்.
குடும்பப் பொழுதுபோக்குப் படமாகத் தயாராகியிருக்கும் இந்தப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் – தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில், நயன்தாரா- விக்னேஷ் சிவன்- எஸ்.எஸ்.லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.வினோத் சி.ஜே.மற்றும் கே.எஸ்.மயில்வாகனன் ஆகியோர் இணைதயாரிப்பாளர்களாகவும்,வி.கே.குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
இப்படத்தில் இடம்பெற்ற ‘கன்னக்குழியா பொத குழியா குழப்புறியே எனத் தொடங்கும் முதல்பாடல் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.இந்தப்பாடலை படத்தின் இயக்குநர் விஷ்ணு எடவன் எழுத ஜிவி.பிரகாஷ் குமார் பாடியிருந்தார்.அப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
அதன்பின் அப்படம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில்,ஜூலை 20 ஆம் தேதியன்று திடீரென படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்தார்கள்.அதில்,இப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள்.
ஹாய் படம் தொடங்கியதிலிருந்தே பல சிக்கல்கள்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான எல்ஐகே மற்றும் இந்தப்படம் ஆகிய இரண்டையும் செவன் ஸ்கிரின் நிறுவனமும் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தன.எனவே,அந்தப்படத்தின் வரவு செலவுகள் இந்தப்படத்தின் வரவு செலவுகள் ஆகியன இரண்டறக் கலந்து பெரும் குழப்பத்தில் இருந்தார்கள் என்று சொல்லப்பட்டது.இந்தப்பட உருவாக்கம் திட்டமிட்டதைவிட தாமதம் ஆனதற்கு அதுவே காரணம் என்றும் சொல்லப்பட்டது.ஒருகட்டத்தில் இந்தப்படம் நடக்காது என்றுகூடச் சொன்னார்கள்.அவை எல்லாவற்றையும் தாண்டி படம் முழுமையாகத் தயாராகியிருக்கிறது.இந்நிலையில் படத்தைப் பார்த்த அனைவருக்கும்,படம் நல்லா வந்திருக்கு என்கிற மகிழ்ச்சியில் இருந்தார்கள்.
அதனாலேயே,அந்தத் தேதியில் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளிவந்தாலும் தாழ்வில்லை இந்தப்படத்தை வெளியிடுவோம் என்று முடிவு செய்து தேதி அறிவித்ததாகச் சொல்லப்பட்டது.
ஆனால்,அறிவித்தபடி ஆகஸ்ட் 14 ஆம் தேதி படம் வெளியாகாது என்று சொல்கிறார்கள்.
ஏனென்றால்,படம் நன்றாக இருப்பதால் பெரிதாக விளம்பரம் செய்து தனியாக வெளியிடலாம் என்று முடிவுசெய்து தள்ளி வைத்திருக்கிறார்கள் என்று ஒரு தகவல்.
இன்னொரு பக்கம்,இந்தப்படம் தொடர்பாக சுமார் 14 கோடி சிக்கல் இருக்கிறது.அது சரியாகாததால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறது என்கிறார்கள்.
எப்படியோ ஆகஸ்ட் 14 இல் படம் வராது என்பது மட்டும் உறுதியாம்.











