இசைஞானி இளையராஜாவுக்கு கவிஞர் கபிலனின் கவி வணக்கம்
இளையராஜா 75 கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழ்த் திரையுலகம் சார்பாக இளையராஜா 75 நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியது.
இளையராஜாவுக்குச் சிறப்புச் சேர்க்கும் விதமாக பாடலாசிரியர் கவிஞர் கபிலன் எழுதி ஆனந்தவிகடன் இதழில் வெளியாகியுள்ள கவிதை…..
ஒன்பது துளைகள் கொண்ட
மனிதப் புல்லாங்குழல்
நீங்கள்
தூண்டில்போட்டு
முத்தெடுத்தவர் அல்லர்
கரையைக் கடக்க
கடலையே குடித்தவர்
ரேடியோவை விற்று
சென்னைக்கு வந்தவர்
இன்று
உங்கள் பாடலைப் பாடாத
ரேடியோவே இல்லை
கம்பி வாத்தியங்கள்
உங்கள்
நரம்புகள்
காற்று வாத்தியங்கள்
சுவாசங்கள்
தோல் வாத்தியங்கள்
கைத்தட்டல்கள்
நாட்டுப் பாடலை
நாட்டுடைமை ஆக்கிய
உங்கள் இசை
இந்தியை மறக்கவைத்த
இந்திய இசை
நிறம் கறுப்புக்கட்டை
ஆடை வெள்ளைக்கட்டை
பேசும் பியானோ
பல்லவி, சரணம்
ஈன்ற
பாட்டுடைத் தலைவன்
நீங்கள்
சாப்பிடும் தட்டுகூட
இசைத்தட்டு
தமிழ்ப் பாடலின்
புழுக்கத்தைப் போக்கும்
விசிறி சாமியார்
பனிமுட்டையில் வெளியான
சில் வண்டுகளின் முனகல்
உங்கள்
மெல், சொல் இசை
பெற்றோர் இழந்த
பிள்ளைகளுக்கும்
பிள்ளைகள் வெறுத்த
பெற்றோருக்கும்
உம்பாடல்
உறங்குவதற்கான
இமைப்போர்வை
திருவாசகம் தந்த
விரல்கள்
கடவுளின்
கண்ணீரைத்துடைத்த
கைக்குட்டை
உங்கள்
இதயம்
கண்ணாடிக்குள் துடிக்கும்
கடிகாரமுள் அல்ல
எங்கள்
காதுகளுக்குள் துடிக்கும்
கர்ப்பசிசு
கிராமம்
நகரமாகிக்கொண்டிருக்கிறது,
நாற்பது
ஆண்டுகளுக்கு முன்பே
நீங்கள்
நகரத்தை
கிராமமாக்கியவர்
பூவளர்நிழலே
புல்லாங்குழலே
இசைத்துக்கொண்டே
இரு
எங்கள்
பரம்பரைகளின்
சுவாசமாய்
அதோ
இசைஞானி வருகிறார்
குயில்களே…
எழுந்து
நில்லுங்கள்…!










