September 14, 2026
சினிமா செய்திகள்

சர்கார் கதைதிருட்டு விவகாரம் – தயாரிப்பு நிறுவனம் நினைப்பது என்ன?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’.இப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது கதையைத் திருடி ‘சர்கார்’ படத்துக்கு பயன்படுத்தியதாக வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

நான் ‘செங்கோல்’ என்ற தலைப்பில் எழுதிய கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்தேன். அந்தக் கதையைத் திருடி, ‘சர்கார்’ என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கியுள்ளார்.

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜிடம் இந்த பிரச்சினையைக் கொண்டுசென்றபோது அவர் இருதரப்பையும் அழைத்து விசாரித்தார். பின்னர், ‘செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ இரண்டும் ஒரே கதைதான் என உத்தரவிட்டார். எனவே, ‘சர்கார்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பட நிறுவனம் சார்பில், வரும் தீபாவளி அன்று படத்தை வெளியிட உத்தேசித்துள்ளதாகவும், வழக்கு குறித்து தங்கள் பதிலை வரும் 30 ஆம் தேதி அளிப்பதாகவும் அவகாசம் கேட்டனர். மேலும், அதுவரை தடை எதுவும் விதிக்காமல் இருக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுந்தர், இந்த வழக்கு தொடர்பாக படத் தயாரிப்பாளர், தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கம் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், ‘செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ கதை இரண்டும் ஒன்றே என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று வெளியானது.இது சமூகவலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

எழுத்தாளர்கள் சங்கத்தைப் பொறுத்த வரை இரண்டு கதையும் ஒரே சாராம்சம்தான். எனவே, அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி எடுக்க வேண்டுமோ, எடுத்துக் கொள்ளுங்கள். முழுமையாக உதவ முடியாததற்கு வருத்தம் தெரிவிக்கிறோம் என்று வருணிடம் கடிதம் கொடுத்தோம். அதை நீதிமன் றத்தில் சமர்ப்பித்துள்ளார். அந்த கடிதம்தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அந்தக் கடிதம் எங்களுடையதுதான். அதில் மாற்றம் இல்லை என்று கே.பாக்யராஜும் தெரிவித்துள்ளார்.

இதனால் சர்கார் படத்துக்கு சிக்கல் அதிகரித்திருக்கிறது.

அதேசமயம் இப்படம் நவம்பர் 6 வெளியீடு என்கிற விளம்பரங்களுக்குக் குறைவில்லை.வழக்கின் முடிவு எப்படியும் தங்களுக்குச் சாதமாக இருக்கும் என்று படக்குழு உறுதியாக நம்புகிறது போலும்.

Related Posts