கைவிடப்பட்ட சிம்பு படம் – மாநாடு தொடங்குகிறது
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ஐதராபாத்தில் தொடர்ந்தது. கொரோனா சிக்கல் காரணமாக அந்தப் படப்பிடிப்பு தடைபட்டது.
ஊரடங்கு நீண்டு கொண்டிருக்கும் நிலையில் அப்படத்தைத் தொடர்ந்து எடுக்கும் முடிவை படக்குழு கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது.
திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுத்தாலும் இந்தப்படத்தில் சுமார் இரண்டாயிரம் துணைநடிகர்களை வைத்து எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் இருப்பதால் உடனடியாகப் படப்பிடிப்பை நடத்த முடியாத நிலை ஏற்படும் என்று தெரிகிறது.
இதனால், சிம்பு,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் தேதிகளை வீணாக்காமல் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என முடிவு செய்த படக்குழு 30 நாட்களில் எடுக்கிற மாதிரி ஒரு புதிய கதையை உருவாக்கியிருக்கிறதாம்.
வெங்கட்பிரபுவே இயக்கும் அந்தக் கதை பேய்க்கதை என்று சொல்லப்படுகிறது. பெரிய பொருட்செலவின்றி ஒரே இடத்தில் மொத்தப் படப்பிடிப்பையும் நடத்தத் திட்டமிட்டு அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.
இதற்கு சிம்பு ஒப்புக்கொண்டால் ஜூலையில் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார்கள் என்று சொல்லப்பட்டது.
இப்போது அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டார்கள் போலிருக்கிறது.
மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி அண்மையில் வெளியிட்டுள்ள பதிவில், திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அரசாங்கம் அனுமதி அளித்தவுடனே மாநாடு படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியிருக்கிறார்.
இதனால், 30 நாட்களுக்குள் ஒரு சின்ன படம் என்கிற திட்டத்தைக் கைவிட்டு மாநாடு படத்தைத் தொடரவிருக்கிறார்கள் என்று தெரிகிறது.












