இந்தியன் 2 படப்பிடிப்புக்கான அரங்கம் அமைக்கும் பணி – கமல் ஷங்கர் புதியமுடிவு
கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.ஷங்கர் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர் தப்பினர்.
பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி அரங்கில் இந்த விபத்து நடந்தது.
இவ்விபத்து நடந்த அடுத்த மாதமே கொரோனா ஊரடங்கு தொடங்கியதால் படப்பிடிப்பு மொத்தமாக நின்றது.
அதன்பின் பல்வேறு இடையூறுகளைக் கடந்து இப்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் தொடங்கியிருக்கின்றன.
அப்படத்தின் படப்பிடிப்புக்காக அரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இம்முறையும் ஈவிபியிலேயே அரங்கம் அமைக்கலாமா? என்கிற பேச்சு வந்திருக்கிறது.
அப்போது கமல் மற்றும் ஷங்கர் ஆகிய இருவருமே அங்கு வேண்டாம் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்களாம்.
கண்முன்னால் சில உயிர்கள் பறிபோன இடத்தில் மீண்டும் படப்பிடிப்பு நடத்த மனமில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதன்பின், சாலிகிராமத்திலுள்ள பிரசாத் லேபில், வேலைக்காரன் படத்துக்கு அரங்கம் அமைத்த இடத்தில் இந்தியன் 2 படத்துக்கான அரங்கம் அமைக்கும் பணிகள் வேகமாகத் தொடங்கிவிட்டன.
விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.











