மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கும் தனுஷ் – 3 படங்கள் தயாரிக்கிறார்
நடிகர் தனுஷ் 2012 ஆம் ஆண்டு வுண்டர்பார் ஃபிலிம்ஸ் என்கிற சொந்தப்பட நிறுவனம் தொடங்கினார். அதில் முதலாவதாக அவர் மனைவி இயக்கிய 3 படம் தயாரிக்கப்பட்டது.
அதன்பின், சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்கள் விஜய்சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் உட்பட பல படங்களைத் தயாரித்தார்.
காக்காமுட்டை, விசாரணை போன்ற விருதுபெற்ற படங்களும் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகின.
2018 இல் தனுஷ் நடித்த மாரி 2 படத்துக்குப் பின் அந்நிறுவனம் படத்தயாரிப்பில் ஈடுபடவில்லை. இனிமேல் சொந்தத் தயாரிப்பு வேண்டாம் என்று தனுஷ் முடிவுசெய்துவிட்டதாகச் சொல்லப்பட்டது.
ஆனால், இப்போது மீண்டும் அந்நிறுவனத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறாராம் தனுஷ்.
அந்நிறுவனத்தின் சார்பில் முதலில் மூன்று படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பியார்பிரேமாகாதல் பட இயக்குநர் இளன் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறனின் வடசென்னை 2, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் ஆகிய மூன்று படங்களை அடுத்தடுத்து தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.
இம்மூன்று படங்களிலும் தனுஷே கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.











