சினிமா செய்திகள்

தமிழ் ரசிகர்களுக்கு தெலுங்குநடிகர் கொடுத்த வாக்குறுதி

அரிமாநம்பி, இருமுகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆனந்த்சங்கர் இயக்கத்தில் தெலுங்குநடிகர் விஜய்தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.இப்படத்திற்கு நோட்டா என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்தப் படத்தின் முதல்பார்வை மார்ச் 8, 2018 அன்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. சந்திரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், கலை இயக்குநர் கிரண், எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா, ஸ்டைலீட் ஷ்ராவ்யா சர்மா என படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், முன்னணி இயக்குநர்கள் பா. இரஞ்சித், எஸ்எம்எஸ் ராஜேஷ், டீகே, ஷாந்தகுமார், விஜய் வரதராஜ், சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியவர்களுடன் பிரபல விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் விஜய் தேவரகொண்டா பேசுகையில்,

2016 இல் ‘பெள்ளி சூப்புலு’ படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் என்னிடம் தமிழில் நடிக்குமாறு கேட்டார்கள். ஆனால் நான் தான் மறுத்தேன். அர்ஜுன் ரெட்டி வெளியான பிறகும் என்னை தொடர்ந்து தமிழில் நடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது நான் எனக்கு பொருத்தமான கதை அமைந்தால் நடிக்கிறேன் என்று சொன்னேன்.

இயக்குநர் ஆனந்த், என்னைச் சந்தித்து கதையைச் சொன்னார். இந்தக் கதையை முழுமையாகக் கேட்டேன். அற்புதமாக இருந்தது. எனக்கு ஏற்ற கதையாகவும் இருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இந்த சமயத்தில் உங்களிடத்தில் ஒரேயொரு வாக்குறுதியை அளிக்கிறேன். இந்தப் படத்திற்கு நானே தமிழில் டப்பிங் பேசுவேன். அதற்குள் நான் தமிழைக் கற்றுக்கொள்வேன். என்னுடைய நடிப்பை என்னுடைய குரலில் தான் பார்ப்பீர்கள். தமிழ் ரசிகர்களுக்கு வாழ்த்துகள் என்றார்.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மார்ச் 9 முதல் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

Related Posts