சினிமா செய்திகள்

வெளிவருமுன்பே திருடுபோன ஜோதிகா படம் – அதிர்ந்த அமேசான்

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக இணையதளத்தில் வெளியானது.

இப்படம் இன்று அதாவது மே 29 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இரவு பனிரெண்டு மணிக்கு படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது.

ஆனால் சுமார் ஒரு மணி நேரம் முன்பாகவே படம் வெளியாகிவிட்டது.

அதற்குக் காரணம், படத்தை வெளியிடவிருந்த அதிகாரப்பூர்வ தளமான அமேசானில் வெளிவருமுன்பே சட்டவிரோதமாக தமிழ் ராக்கரசில் படம் வெளியாகிவிட்டது என்கிறார்கள்.

இதனால் அதிர்ந்துபோன அமேசான் நிறுவனம், அவசர அவசரமாக திட்டமிட்டதைவிட முன்கூட்டியே வெளியிட்டார்களாம்.

இந்த நிகழ்வால் திரையுலகம் பேரரதிர்ச்சி அடைந்துள்ளது. திரைப்படங்களின் வெளிநாட்டு விநியோக உரிமை கொடுப்பதன் மூலம்தான் திருட்டுத்தனமாக படங்கள் வெளியாகின்றன என்று சொல்லப்பட்டது. அதன்பின் தமிழகத்துக்குள்ளேயே திரையரங்குகளில் படத்தை எடுக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.

இந்தப்படம் மேற்சொன்ன இரண்டு இடங்களிலும் வெளியாகாத நிலையில் எப்படி திருடு போனது? எங்கிருந்து போனது? என்கிற பெரிய விவாதம் இப்போது எழுந்துள்ளது.

Related Posts