விமர்சனம்

ராக்கெட்ரி – திரைப்பட விமர்சனம்

நம்பி நாராயணன் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் ஸ்தாபகரான விக்ராம் சாராபாயின் நேரடி மாணவர். சதீஷ் தவானுடன் இணைந்து பணியாற்றியவர்.

1994 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தனது வீட்டின் அருகேயிருந்த கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த இஸ்ரோ அமைப்பின் மூத்த விஞ்ஞானியான நம்பி நாராயணன் காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு கிரையோஜெனிக் என்ஜினின் இரகசியங்களை விற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டார். இவரிடமிருந்து இரகசியங்களைப் பெற்றதாக மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா, பவுசியா ஹாசன் ஆகிய இரண்டு பெண்கள் வாக்குமூலம் அளித்திருந்தார்கள்.

இதன்படிதான் நம்பி நாராயணன் கைதானார்.நம்பி நாராயணனை 5 நாட்கள் தொடர்ச்சியாக கடும்சித்ரவதைகள் செய்தது காவல்துறை.இதற்கு மேல் அடித்தால் செத்துவிடுவார் என்று நினைத்து மருத்துவமனையில் சேர்த்துவிட்டார்கள்.

6 ஆவது நாளில் இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்துக் கொண்டது. அங்கும் அவருக்கு சித்ரவதை தொடர்ந்தது.

சி.பி.ஐ.யினர் வழக்கமாக செய்யும் விசாரணை முறையுடன் ஐஸ்கட்டி ட்ரீட்மெண்ட்டும் அவருக்குத் தரப்பட்டது.
ஆனாலும் 3 ஆவது நாளே நம்பி சொல்வது உண்மை என்பதைத் தெரிந்து கொண்டு சி.பி.ஐ. கடுமையை முற்றிலுமாக விலக்கிக் கொண்டது.

இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது. பொய்யானது. உண்மையில்லாதது என்று 1996 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது சிபிஐ.

1998 ஆம் ஆண்டு நம்பி நாராயணனும் மற்றவர்களும் நிரபராதிகள் என்று உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்கள்.

அதன்பின், தன் மீது பொய்வழக்கு சுமத்தியமைக்காக நட்ட ஈடு கேட்டு நீதிமன்றம் சென்றார் நம்பி நாராயணன். அதன் விளைவு, அவருக்கு 50 இலட்சம் ரூபாய் நட்ட ஈடு கொடுக்கும்படி 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தன்னை சித்ரவதை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்தார் நம்பி நாராயணன்.அதை சி.பி.ஐ விசாரிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இடையில் புகுந்த கேரள மாநில அரசு, அந்தக் கொடிய காவல்துறையினரைக் காப்பாற்ற வேண்டி நட்ட ஈட்டுத் தொகையை 1 கோடியே 30 இலட்சமாக உயர்த்தி நம்பி நாராயணனுக்குக் கொடுத்து அந்த வழக்கினை திரும்பப்பெற வைத்தது.

கேரளா மற்றும் இந்தியாவை உலுக்கிய இந்த வழக்கை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம்தான் ராக்கெட்ரி.

நம்பிநாராயணன் வேடத்துக்காக மாதவன் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். இளமைக்காலம் தொடங்கி முதுமைவரை அவரை அப்படியே பிரதியெடுத்திருக்கிறார்.

உடல் அமைப்பில் மட்டுமின்றி நடிப்பிலும் நிஜ நம்பி நாராயணனின் துயரங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவருடைய குடும்பம் கலங்கி நிற்பதும் அதைப்பார்த்து அவர் அதிர்ந்து நிற்பதும் ஈரக்குலையை நடுங்கவைக்கிறது.

அவர் மனைவியாக நடித்திருக்கும் சிம்ரன் சரியான தேர்வு. மகளாக நடித்திருக்கும் மிஷாகோசல், மகன் ஷ்யாம்ரங்கநாதன், அப்துல்கலாமாக நடித்திருக்கும் குல்சன்குரோவர், சிபிஐ அதிகாரியாக வரும் கார்த்திக்குமார் உட்பட அனைவருமே தங்கள் பணியைச் சரியாகச் செய்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

நம்பிநாராயணனைப் பேட்டி எடுப்பவராக சூர்யா வருகிறார். அவரும் கிடைத்த கொஞ்சநேரத்தில் தன் நடிப்புத்திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிர்ஷாரேயின் ஒளிப்பதிவில் காட்சிகளின் பாதிப்பு கண்களுக்குள் இறங்குகிறது.

சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை நன்று. மாலத்தீவு மரியாவிடம் மாதவனைக்காட்டி இவரைத் தெரியுமா? என சிபிஐ அதிகாரி கேட்டதும் தெரியும் என்று சொல்வார். அப்போது உச்சபட்சமாகத் துடிக்கும் மாதவனின் உள்ளத்தை இசையால் மொழிபெயர்த்திருக்கிறார்.

நம்பி நாராயணனாக நடித்ததோடு கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுமிருக்கிறார் மாதவன்.

முதல்பாதி நம்பிநாராயணனின் வளர்ச்சி, உத்வேகம்,நாட்டுப்பற்று ஆகியனவற்றைக் காட்டுகிற காட்சிகள் வைத்தவர், இரண்டாம் பாதியில் அவருக்கு நேர்ந்த கொடுமைகளைக் காட்டியிருக்கிறார்.

நிஜ வழக்கில் இருந்து பாதிக்கு மேற்பட்ட விசயங்களை விட்டுவிட்டு மேலோட்டமாக இருந்தாலும் அதுவே நம்பிநாராயணன் பற்றி எல்லோரும் அறிந்துகொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது.

ராக்கெட் கவுந்தா எப்படி சரிசெய்யறதுன்னு தெரிஞ்ச எங்களுக்கு மனுசன் கவுந்தா என்ன செய்யறதுன்னு தெரியல என்பது உள்ளிட்ட பல வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன.

நான் நிரபராதி என்றால் உண்மையான குற்றவாளி யார்? என்று நம்பிநாராயணன் கேட்கும் கேள்வி இந்திய ஒன்றியத்தின் மீது தொடுக்கப்பட்ட இன்னொரு ராக்கெட்.

நம்பிநாராயணன் கைதானபோது இஸ்ரோவின் தலைவராக இருந்த கி.கஸ்தூரிரங்கன், நம்பி நாராயணன் ரஷ்யாவிடமிருந்து கிரையோஜெனிக் என்ஜினைப் பெற்று வருவதற்கு இந்திய அரசிடம் பேசி பண உதவியைப் பெற்றுத் தந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் நம்பி நாராயணனைக் கை விட்டது ஆகியன பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் இறுதியில் நிஜ நம்பிநாராயணன் திரையில் வருகிறார். மக்கள் அனைவரும் கைதட்டுகிறார்கள்.

நம்பி நாராயணனுக்கு நீதிமன்றங்கள் நட்ட ஈடு கொடுத்தது, ஒன்றிய அரசு பத்மபூசன் விருது கொடுத்தது ஆகிய எல்லாவற்றையும் விட அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமை மற்றும் அங்கீகாரமாக இந்தப்படம் அமைந்திருக்கிறது.

Related Posts