போட் – திரைப்பட விமர்சனம்
ஒரு ஊர் இருக்கிறதென்றால் அங்கு கடவுள் மறுப்பாளர்,கடவுளால் வாழும் பிராமணர்,வட இந்தியர்கள், இஸ்லாமியர் உள்ளிட்ட மதத்தவர்கள், தீவிரமாக இயங்கும் தீவிரவாதிகள் என எல்லாவித மனிதர்களும் இருப்பார்கள்.அப்படிப்பட்ட ஒரு ஊரின் சிற்றுருவமாக ஒரு படகை வடிவமைத்து அதைக் கடலுக்குள் அனுப்பி,அதில் பழுதையும் ஏற்படுத்தி அந்தப் படகில் இருப்போர் நிலைமை என்னவாகும்? என்கிற பதைபதைப்பை ஏற்படுத்தும் படம் போட்.
இந்தியாவின் சுதந்திரத்துக்கு முன்பாக நடக்கும் இந்தக் கதையில், ஜப்பானியர்கள் சென்னை மீது குண்டு போடுகிறார்கள் என்பதால் மீனவரான யோகிபாபு தன் தாயுடன் கடலுக்குள் சென்று தப்பமுயல்கிறார்.அவருடைய படகில் கடவுள் மறுப்பாளர் எம்.எஸ்.பாஸ்கர், பிராமணர் சின்னிஜெயந்த்,வட இந்தியர் சாம்ஸ், இஸ்லாமியர் ஷாரா, கர்ப்பிணியான மதுமிதா ஆகியோருடன் ஒரு ஆங்கிலேயரும் சேர்ந்துகொள்கிறார்.இவ்வளவு பேருடன் கடலுக்குள் செல்லும் படகுக்குள் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் படம்.
யோகிபாபு மற்றும் அவரது தாயாக நடித்திருக்கும் கொளப்புளி லீலா ஆகியோர் அளவாக நடித்திருக்கிறார்கள்.
மொழி படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் வேடம் சுவாரசியமானது.அதைப்போலவே இந்த வேடமும் அமைக்கப்பட்டு சுவாரசியம் கூட்ட முயன்றிருக்கிறார்கள்.
கெளரி கிஷன், மதுமிதா ஆகியோர் பெண்கள் இட ஒதுக்கீட்டின் படி இடம்பெற்று தங்கள் பங்கை நன்றாகச் செய்திருக்கிறார்கள்.
சாம்ஸ்,ஷாரா,சின்னிஜெயந்த்,ஜெஸ்ஸி,அக்ஷத் ஆகியோரும் தத்தம் வேடத்துக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
படகில் இருக்கும் கதை மாந்தர்களின் உரையாடல் வழியே மொத்தப் படமும் நகர்ந்தாலும் விதவிதமான கோணங்களில் கடலையும் படகையும் காட்டுவதோடு வேறுபட்ட மாந்த உணர்வுகளையும் காட்சி வழியே வெளிப்படுத்தி படத்தை இரசிக்க வைக்கப் பெரும்பாடு பட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையில் காட்சிகளுக்கு வலுச் சேர்த்திருக்கிறார்.
பொன்ராஜின் படத்தொகுப்பு படத்தை வேகமாக நகர்த்த சில இடங்களில் உதவியிருக்கிறது.பல இடங்களில் தவறியிருக்கிறது.
பல உயரிய எண்ணங்களை எழுத்தில் வைத்திருந்தாலும் அவற்றைத் திரைமொழியில் மொழிபெயர்ப்பதில் தோல்வி அடைந்திருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.
ஒரு படகையே ஒரு நாடாக உருவகப்படுத்திக் கொண்டு பல்வேறு அரசியலைப் பேசியிருப்பதும்,ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று அதிகாரத்துக்கெதிரான குரலாக நான் இருக்கிறேன் என்பதைப் பல இடங்களில் வெளிப்படுத்தியிருப்பதும் வரவேற்புக்குரியன.
– இளையவன்