சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி திடீர் மறைவு – திரையுலகம் அதிர்ச்சி

நேற்று (மே 5,2026) இராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ்த் திரையுலகில் பல்வேறு இயக்குநர்கள், நடிகர்களை அறிமுகப்படுத்தியதில் முன்னணி நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ்.

தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் தனது ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் இதுவரை 99 திரைப்படங்களை ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார்.

தமிழில் புது வசந்தம், சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, செங்கோட்டை, மிஸ்டர் ரோமியோ, லவ் டுடே (1997), சூர்யவம்சம், சொல்லாமலே, துள்ளாத மனமும் துள்ளும், பூமகள் ஊர்வலம், நீ வருவாய் என, ஆனந்தம், திருப்பாச்சி, ஈ, ஜில்லா உள்ளிட்ட படங்கள் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியானது.

கடைசியாக இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக ‘மாரீசன்’ படம் வெளியானது.இதில் வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஆர்.பி.சவுத்ரியின் மகன்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோர் நடிகர்களாக திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

ஆர்.பி.சவுத்ரி, 1980 களில் திரைப்படத் தயாரிப்புப் பணியை அவர் தொடங்கினார்.சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் அனுபவம் கொண்டவர்.

இதில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களுக்கு முதல்படம் இயக்கும் வாய்ப்பை அவரது தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்.பி.சவுத்ரி மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது….

என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தலைசிறந்த தயாரிப்பாளர்.அருமையான மனிதர்.எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.
அவருடைய அகால மரணச்செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும்,மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.அவர் ஆத்மா சாந்தியடையட்டும்

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ஆர்.பி.சவுத்ரி மறைவு குறித்து இயக்குநர் விக்ரமன் கண்ணீருடன் காணொலிப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில்….

40 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநராக வேண்டும் என்ற கனவுகளோடு சென்னைக்கு வந்து ரொம்ப கஷ்டப்பட்டேன்.உதவி இயக்குநராகப் பணிபுரிந்து இயக்குநராக வேண்டும் என்று பல தயாரிப்பு நிறுவனங்கள் ஏறி இறங்கியிருக்கிறேன்.சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஆர்.பி.சவுத்ரி சாரிடம் போய் ஒரு கதை சொன்னேன்.
அவரும் உடனே ஒகே சொல்லி ஆரம்பித்த படம்தான் ‘புது வசந்தம்’.இன்று என் வீட்டுக்குப் பெயரே ‘புது வசந்தம்’ தான்.இன்று நான் நிம்மதியாகச் சாப்பிடுகிறேன் என்றால்,அது அவர் போட்ட பிச்சை.இன்று அவர் இல்லை.எனக்கு மிகவும் கவலையான விசயம் என்னவென்றால்,100 படம் எடுக்கவேண்டும் என கனவு கண்டார்.சூப்பர் குட் நிறுவனத்தில் 100 படம் எடுப்பார்கள்,ஆனால் அதைப் பார்ப்பதற்கு அவர் இல்லை என்பது வேதனையாக இருக்கிறது

இவ்வாறு பேசியுள்ளார் இயக்குநர் விக்ரமன்.

ஆர்.பி.சவுத்ரி மறைவு குறித்து தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி தனது சமூகவலை தளத்தில் கூறியிருப்பதாவது….

புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேள்விப்பட்டு,மிகுந்த மனவேதனை அடைந்தேன்.பல ஆண்டுகளாக அவரைத் தெரியும்.அண்மையில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக ‘காட்ஃபாதர்’ படத்தில் அவருடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.
எண்ணற்ற திறமையான இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் திரைப்பயணத்தை வடிவமைத்து கணக்கிலடங்காக் கதைகளுக்கு அவர் உயிரூட்டியுள்ளார்.இந்தியத் திரையுலகுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைச் சொற்களால் விவரிக்க இயலாது.அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

என்று தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி.

ஆர்.பி.சவுத்ரி மரணம் குறித்து நடிகர் சரத்குமார் தனது சமூகவலைதளப் பதிவில்….

புகழ்பெற்ற தயாரிப்பாளர்,நண்பர்,என் வழிகாட்டி,என் தத்துவஞானி,என் நட்சத்திர அந்துஸ்துக்குக் காரணமானவர் ஆர்.பி.சவுத்ரி.அவர் துரதிர்ஷ்டவசமாக கார் விபத்தில் காலமானார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக பல தசாப்தங்களாக திரைப்படங்கள் மூலம் இந்தியத் திரையுலகிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவு கூறப்படும்

இவ்வாறு தெரிவித்துள்ளார் சரத்குமார்.

இன்று அவரது உடல் சென்னை கொண்டுவரப்படுகிறது. சென்னை இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அவரது வீட்டில் இறுதிஅஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து இறுதிச்சடங்குகள் நடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Related Posts