கலைஞர் 100 விழா – கமல் ரஜினி விஜய் அஜித் பங்கேற்பு
கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் தமிழ்நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகின்றன.
2023 ஜூன் 3 ஆம் தேதி முதல் 2024 ஜூன் 3 வரை ஓராண்டு முழுவதும் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பிலும் திமுக சார்பிலும் மட்டுமின்றி பல்வேறு தனியார்துறைகள் சார்பிலும் இக்கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
தமிழ்த்திரைப்பட்துறை சார்பிலும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இக்கொண்டாட்டத்தில், திரைப்படத்தயாரிப்பாளர்கள் நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்படத் தொழிலாளர்கள் உள்ளிட்ட எல்லாத் தரப்பினரும் பங்குபெறவிருக்கிறார்கள்.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அக்கூட்டத்தில், தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்சங்கம், தொழிலாளர்கள் சங்கம் (ஃபெப்சி), விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியனவற்றின் சார்பில் பிரதிநிதகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதென தீர்மானிக்கப்படது.
முதற்கட்டமாக, டிசம்பர் 23 ஆம் தேதி விழாவைக் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்விடம் மற்றும் நிகழ்ச்சிநிரல் ஆகியனவற்றைத் தீர்மானிக்கவும் அவற்றைச் செயல்படுத்தவும் தனித்தனியாகக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.
கமல்,ரஜினி,விஜய்,அஜித் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் இந்நிகழவில் பங்கேற்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
வழக்கம்போல், நடிகர் நடிகைகள் கலந்துகொள்ளும் கலைநிகழ்ச்சி போல் அல்லாமல் புதுமையான வகையில் நிகழ்ச்சிகளை வடிவமைப்பது என முடிவு செய்திருக்கிறார்களாம்.
இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
திரைத்துறையில் புகழ்பெற்ற கலைஞர், அரசியலில் தீவிரமாக இருந்தபோதும் திரைத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவருடைய இறுதிக்காலம் வரை திரைப்படத்துறை மீது கொண்டிருந்த காதல் குறையவேயில்லை. அப்படிப்பட்டவருக்கு ஒட்டு மொத்தத் திரைப்படத் துறையினரும் இணைந்து நூற்றாண்டு விழா கொண்டாடுவது சாலப்பொருத்தம்.











