சினிமா செய்திகள்

கருப்பு விழாவில் திரிஷா கலந்துகொள்ளாதது ஏன்? – வெளியான விவரம்

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யா, திரிஷா,யோகிபாபு,ஆர் ஜே பாலாஜி,இந்திரன்ஸ்,நட்டி நட்ராஜ்,சுவாசிகா,ஷிவதா,அனகா மாயா ரவி,சுப்ரீத் ரெட்டி,மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.

ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள்
எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்தப்படம் மே 14 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா,ஏப்ரல் 26 அன்று மதுரையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

படத்தில் நடித்திருக்கும் பெரும்பாலான நடிகர் நடிகையர் கலந்து கொண்ட அந்நிகழ்வில் படத்தின் நாயகி த்ரிஷா கலந்துகொள்ளவில்லை.

நிகழ்வில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி மட்டும் அதுபற்றிப் பேசினார்.அவர், திரிஷா இன்று எங்களுடன் இணைய முடியவில்லை.ஆனாலும் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.திரிஷாவாக இருப்பது எளிதல்ல.23 ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது எளிதல்ல. சமீபகாலங்களில் இது அவருடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்றார்.

திரிஷா ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதற்கு ஒரு காரணம் சொல்லப்பட்டது.அதை உறுதிப்படுத்தும் விதமாக மே 1 ஆம் தேதி அமைந்தது.

திரிஷாவை இந்நிகழ்வில் கலந்து கொள்ள அழைத்தபோது, படம் குறித்த எந்த விளம்பரத்திலும் என்னைக் காட்டவே இல்லை.முழுக்க முழுக்க சூர்யா படம்போலச் சித்தரிக்கிறீர்கள்.அதனால் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

சூர்யா படத்தை சூர்யா படம்போல் சித்தரிப்பது குற்றம் என்பதை என்ன சொல்வது? என்று தலையிலடித்துக் கொண்டு வந்துவிட்டார்களாம்.

அதன்பின், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி திரிஷாவை சமாதானப்படுத்தும் விதமாக அவருடைய கதாபாத்திர அறிமுகக் காணொலி ஒன்றை வெளியிட்டார்.அதில் அவருக்கு சவுத் குயின் என்றொரு பட்டமும் கொடுத்திருந்தார்.

அந்தக் காணொலியைப் பகிர்ந்த ஒரு நபர்,அடக் கடவுளே, ஆமாம், இதில் த்ரிஷா இருக்கிறார் என்பதை நான் மறந்துவிட்டேன்.
அவர் எவ்வளவு இளமையாகத் தெரிகிறார் என்பதைப் பற்றிப் பேசலாமா?? உண்மையிலேயே அவருக்கு வயது குறைவது போல் தெரிகிறது.அப்புறம், கருப்பு படத்திற்கு முன்பு சூர்யாவுடன் த்ரிஷா கடைசியாக நடித்த படம் எது?

என்று பதிவிட்டிருந்தார்.

அதை தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்த திரிஷா,அதோடு, நன்றி.நானும் மறந்துவிட்டேன்.குறைந்தபட்சம் இப்போதாவது நினைவுபடுத்தியிருக்கிறார்கள்.நல்லது

என்று பதிவிட்டிருக்கிறார்.

இதன் மூலம், படத்தின் விளம்பரங்களில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்பதால் மதுரை விழாவில் திரிஷா கலந்துகொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டை அவரே உறுதிப்படுத்திவிட்டார் என்று சொல்கிறார்கள்.

Related Posts