விமர்சனம்

டிக்கிலோனா – திரைப்பட விமர்சனம்

காலப்பயணம்  (டைம் டிராவல்) சென்று தன் வாழ்க்கையைக் கண்டறியும் ஒரு சாமானியனின் கதைதான் டிக்கிலோனா.

ஃபேண்டசி டிராமா என்று சொல்லப்படும் வகையில் உருவாகியிருக்கிறது.

நாயகன் சந்தானத்துக்கு ஒன்றல்ல மூன்றுவேடங்கள்.2027 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டுக்கு வந்து வந்து போகிறார் சந்தானம். ஏழாண்டுகளில் தோற்றத்தில் சின்ன மாற்றம் கூட இல்லை என்பது அடடாவா அலட்சியமா? 

பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்க வந்த வைத்தியருக்கே பைத்தியம் பிடித்தால் பாணியில் கொஞ்சம் பிசகினாலும் குழப்பத்தில் ஆழ்த்திவிடக்கூடிய காட்சிகளை தன் வசனங்களாலும் அவற்றை உச்சரிக்கும் விதத்தாலும் எளிமையாக்கியிருக்கிறார் சந்தானம்.

மூன்று சந்தானத்துக்கு இரண்டு நாயகிகள். அனகா, ஷிரின் காஞ்ச்வாலா ஆகியோர்.இருவருமே தங்கள் பங்கைச் சரியாகச் செய்து கல்யாணம் செய்யப்போகும் இளைஞர்களைப் பயமுறுத்துகிறார்கள்.

யோகிபாபு,, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், முனிஸ்காந்த், சித்ரா லட்சுமணன்,சேசு,லொள்ளு சபா மாறன் ஆகிய அனைவருக்குமே இரசிகர்களைச் சிரிக்க வைப்பது மட்டுமே வேலை. சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.
முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் வந்துபோகிறார். இதற்கு எதற்கு இவர்?

அரவிந்த் ஒளிப்பதிவு அளவு., ஜோமின் மேத்யூவின் படத் தொகுப்பு பாதுகாப்பு.

யுவன் சங்கர்ராஜா இசையில் பாடல்கள் தாழ்வில்லை.பின்னணி இசை சிறப்பு.

கமலின் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில்  இளையராஜா இசையில் இடம்பெற்ற ‘பேர் வச்சாலும்..’ பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு, வீணடிக்கப்பட்டிருக்கிறது. 

ஒரு சட்டையை எடுத்து வந்த பின்பு கடையில் பார்த்த இன்னொரு சட்டையை எடுத்திருக்கலாமோ? என்பது போலக் கல்யாணம் செய்த எல்லோருக்கும் இவளுக்குப் பதிலாக அவளை மணந்திருக்கலாம் என்கிற எண்ணம் தோன்றும். அப்படித் தோன்றுகிறவர்களுக்குச் சிரித்துக் கொண்டே ஆப்பு வைத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி.

Related Posts