பேச்சி – திரைப்பட விமர்சனம்
ஓர் அடர்ந்த வனத்துக்குள் சிலர் பயணப்படுகிறார்கள்.அவர்களுக்கு எதிர்பாராத ஆபத்துகள் வருகின்றன?அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்கிற கதையைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் பேச்சி.இதுபோன்று நிறையப் படங்கள் பார்த்துவிட்டோமே என்று அலட்சியமாக அமர்ந்திருப்பவர்களுக்குப் பல ஆச்சரியங்களைக் கொடுக்கும் படமாக வந்திருக்கிறது.
காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ் ஆகிய ஐந்து பேரும் கொல்லிமலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் மலையேற்றம் செல்கிறார்கள்.அவர்களுக்கு வழிகாட்ட பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பாலசரவணன் செல்கிறார்.அவர்கள் பயணம் இயல்பாகவும் சுமுகமாகவும் அமைந்துவிட்டால் எப்படி? தடை செய்யப்பட்ட பகுதிக்குள் பாலசரவணனின் அறிவுரையை மீறிச் செல்கிறார்கள்.அங்கு பல ஆபத்துகளைச் சந்திக்கிறார்கள்.அவை என்ன? எதனால்? என்கிற கேள்விகளுக்கான விடைதாம் திரைக்கதை.
காட்டுக்குள் செல்பவர்கள், காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா மற்றும் மகேஷ் ஆகிய ஐந்து பேர்.எல்லோருக்கும் சமமான இடஒதுக்கீடு கொடுத்திருக்கிறார் இயக்குநர்.அனைவரும் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்து அவருக்கு நற்பெயர் பெற்றுத்தந்திருக்கிறார்கள். தொடக்கத்தில் உற்சாகத்தைக் காட்டும் காட்சிகளில் இரசிகர்களும் உற்சாகமாகிறார்கள். அடுத்தடுத்து சிக்கல்களில் சிக்கி அச்சப்பட்டு அலறும் நேரத்தில் இரசிகர்களையும் அலற வைக்கிறார்கள்.
இதுவரை பாலசரவணனை நகைச்சுவை வேடங்களில் பார்த்து வந்தோம்.அவருக்கு இந்தப்படத்தில் குணச்சித்திர நடிகராகப் பதவி உயர்வு.அதில் தன்னை முழுக்க ஒப்புக்கொடுத்து வரவேற்புப் பெறுகிறார்.தன்னை நம்பி வந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கொடும் ஆபத்துகளை எதிர்கொண்டு நம்மைப் பதற வைக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பார்த்திபனின் பணியால்,இந்தப் படமெடுத்த காடு எங்கே இருக்கிறது? அங்கே நாமும் போக வேண்டும் என்று எண்ண வைத்துவிடுகிறார்.கதைக்குள் முழுமையாகப் போகும் நேரத்தில் அவருடைய உழைப்பு மேலும் சிறப்பு.
திகில் படங்களுக்கு இசை முக்கியம்.பாடல்களில் துடிப்பையும் பின்னணி இசையில் படபடப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன்.
எழுதி இயக்கியிருக்கிறார் இராமச்சந்திரன்.பி. ஒரு அமானுஷ்ய சக்தியை பேய் என்று சொல்லாமல் வேறொன்றாகச் சொல்லியிருப்பது புதிது.இது போன்ற அமானுஷ்ய சக்திகளைக் கொண்ட படங்கள் என்றாலே இருள் முக்கியத்துவம் பெற்றுவிடும்.முதன்முறையாக பகலிலேயே எல்லாக் காட்சிகளையும் படமாக்கி அதிலும் பார்வையாளர்களைப் பயப்பட வைத்துப் பாராட்டுப் பெறுகிறார்.
– இளையவன்