விமர்சனம்

கடாரம் கொண்டான் – திரைப்பட விமர்சனம்

காவல்துறை அதிகாரியாக இருந்து பின் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவராக மாறுகிறார் விக்ரம். பெரிய திருட்டு ஒன்றைச் செய்யப் போகுமிடத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற அளவுக்குச் சிக்கல். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கேயும் அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அங்கிருக்கும் ஆண் செவிலியரான அபிஹாசன் அவரைக் காப்பாற்றுகிறார்.

அதன்விளைவு அபி ஹாசனின் நிறைமாதக் கர்ப்பிணி மனைவி அக்‌ஷராஹாசன் கடத்தப்படுகிறார். விக்ரம், அபிஹாசன் ஆகிய இருவருமே காவல்துறை தேடும் கடுமையான குற்றவாளிகளாகிறார்கள்.

இக்கொடிய சிக்கல்களிலிருந்து அவர்கள் மீண்டார்களா? என்பது கதை.

விக்ரம் செம ஸ்டைலாக இருக்கிறார். தோற்றத்திலேயே இவர் எதையும் செய்யக்கூடியவர் என்கிற எண்ணத்தை உருவாக்குகிறார். அதுபோலவே எல்லாப் பெரிய விசயங்களையும் மிக அலட்சியமாகச் செய்து முடிக்கிறார்.

அவருடைய மதிப்பை உயர்த்துகிற வேடம், மிகவும் ரசித்து நடித்திருக்கிறார்.

தம்பதிகளாக நடித்திருக்கும் அபி அக்‌ஷரா ஹாசன்கள் கொடுத்த பாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறார்கள்.

அபிக்கு இது முதல்படம். ஆனாலும் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்கிற மொழிக்கு ஏற்ப நடித்து அப்பா நாசர் பெயரைக் காப்பாற்றுகிறார்.

கர்ப்பிணி வேடத்தில், பயம் பதட்டம், போராட்டம் ஆகிய உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தி நம்மையும் பதட்டமடைய வைக்கிறார் அக்‌ஷரா.

மலேசியன் காவல்துறை வேடத்தில் நிறையப் பேர் வருகிறார்கள். வில்லனாக வருகிற விகாஸ் ஸ்ரீவட்சவ் நல்ல தேர்வு. சொரி மார்யியா கவனிக்க வைக்கிறார்.

ஸ்ரீனிவாஸ் ஆர்.குப்தாவின் ஒளிப்பதிவு விக்ரமைக் கம்பீரமாக்கியிருப்பதோடு மலேசியாவை நம் கண்களுக்குள் நிறைக்கிறது.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்துக்குப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் பிற்பாதியை போலவே முற்பாதியிலும் செயல்பட்டிருந்திருக்கலாம்.

அபெளட் போர்ட்டண்ட் என்கிற பிரெஞ்சுத் திரைப்படத்தின் தழுவல் என்று சொல்லித்தான் படத்தைத் தொடங்குகிறார்கள்.

கதாபாத்திரங்களை முழுமையாக அறிமுகப்படுத்துகிற தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப திரைக்கதையை மாற்றியிருந்தால் படத்தில் இருக்கும் அந்நியத்தன்மை குறைந்து ஒட்டுதல் ஏற்பட்டிருக்கும்.

ஆனாலும் எல்லாவற்றையுமே சொல்லிக் கொடுக்காமல் பார்வையாளர்களும் இணைந்து பயணிக்கும் திரைக்கதை உத்தி கொண்ட படத்தை நேர்த்தியாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா.

Related Posts