December 11, 2025
சினிமா செய்திகள்

கவினின் ஸ்டார் – ஆச்சரியமளிக்கும் தமிழ்நாடு வியாபாரம்

‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன்,கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை என்.வினோத் ராஜ்குமார் கவனிக்க,படத்தொகுப்புப் பணிகளை பிரதீப் ஈ.ராகவ் மேற்கொண்டிருக்கிறார்.

பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்மன்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தில் பி.ரூபக் பிரணவ் தேஜ், சுனில் ஷா, ராஜா சுப்பிரமணியன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

இப்படத்தின் முதல்பார்வை மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.நடிகர் கவின் இளம் பெண்ணாக தோன்றும் பாடல் காட்சி இரசிகர்களிடத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.முன்னோட்டத்திலும் இரசிகர்களைக் கவரும் பல காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

மே மாதம் பத்தாம் தேதியன்று வெளியாகும் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பு இரசிகர்களிடத்திலும் எக்கச்சக்கமாக எகிறி இருக்கிறது.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை கோவை சுப்பையா பெற்றிருக்கிறார்.சுமார் ஏழு கோடி கொடுத்து அவர் இந்த உரிமையைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அவர் வாங்கிய பின்பு, தமிழ்நாடு முழுவதிலுமுள்ள விநியோகஸ்தர்களுக்குப் படத்தைக் கொடுத்திருக்கிறார். விநியோக முறையில் இந்த வியாபாரம் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக சுமார் எட்டுகோடி வரை அவர் முன்பணம் பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இப்படி வேகமாக இந்தப்படம் வியாபாரம் ஆகியிருப்பது சம்பந்தப்பட்டவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

இந்த வியாபார விசயம் அறிந்த திரையுலகினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பல பெரிய படங்களே வியாபாரத்தில் பெரும் தடுமாற்றத்தைச் சந்திக்கும் இந்தக்காலத்தில் இப்படம் இவ்வளவு வேகமாக வியாபாரம் ஆகியிருப்பதுதான் அந்த ஆச்சரியத்துக்குக் காரணம் என்கிறார்கள்.

Related Posts