சினிமா செய்திகள்

காளிதாஸ் 2 வெளியீட்டுத் தேதி முடிவானது – விவரங்கள்

2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில்,பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’.

‘காளிதாஸ்’ படத்தைத் தொடர்ந்து ‘காளிதாஸ் 2’ படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.‌ இதில் பரத் மற்றும் அஜய் கார்த்தி, பிரகாஷ் ராஜ்,’ஆடுகளம்’ கிஷோர்,சுரேஷ் மேனன்,ஆனந்த் நாக்,பவானி ஸ்ரீ,அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் பிரபலமான சங்கீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் மீண்டும் நடிப்பிற்கு திரும்பியிருக்கிறார்.

சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ்.இசையமைக்கிறார்.துரைராஜ் கலை இயக்கத்தையும்,புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்புப் பணிகளையும் கவனிக்கிறார்கள்.நிர்வாகத் தயாரிப்பை பழனியப்பன் மேற்கொள்கிறார்.

இந்தத் திரைப்படத்தை ஸ்கை பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் தயாரிப்பாளர் யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படம் முழுமையாகத் தயாராகிவிட்டது.

இப்படத்தை ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மார்ச் 18 ஆம் தேதி நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு திரையுலகினரிடமும் மக்களிடமும் அதிகமாக இருக்கிறது.காளிதாஸ் படத்தின் வெற்றி மற்றும் காளிதாஸ் 2 படத்தில் இருக்கும் நடிகர்கள் ஆகியன அதற்குக் காரணம்.

அதோடு, இவ்வாண்டு தொடங்கியதிலிருந்து சனவரி மாதம் தலைவர் தம்பி தலைமையில், பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் வித் லவ், இறுதியில் வெளியான தாய்க்கிழவி ஆகிய சின்னப்படங்கள் பெரிய வெற்றியை ஈட்டியிருக்கின்றன.

அதனால், நல்ல கதையம்சமுள்ள படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்கீடு உட்பட எல்லா விசயங்களும் சரியாக நடக்கின்றன.

அந்த வகையில் காளிதாஸ் 2 படக்குழு மிகவும் தெம்பாக இருக்கிறது.படத்தை முழுமையாகப் பார்த்த பிறகு அந்தத் தெம்பு மேலும் கூடியிருக்கிறது என்கிறார்கள்.

அதனால், வெளியீட்டுத் தேதியை இறுதிசெய்து படத்தை வெளியிடும் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்.

மார்ச் 18 இல் நடக்கவிருக்கும் இசைவெளியீட்டுவிழாவில் தொடங்கி படத்தை முழுமூச்சாகக் கொண்டு சேர்க்கும் பணி வேகமாக நடக்கும் என்கிறார்கள்.

நல்லது, நடக்கட்டும்.

Related Posts