இயக்குநர் மறைவுக்குப் பின் வெளியாகும் படம் – நெகிழ்ச்சி நிகழ்வு
இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் கெணத்த காணோம்.நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படத்தில் லவ்லின் சந்திரசேகர்,ராமகிருஷ்ணன்,ரேச்சல் ரபேக்கா,ஜார்ஜ் மரியம்,மொட்டை ராஜேந்திரன்,கவிதாபாரதி, கலைபாண்டியன்,ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்,வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.ஆர்.ராமர் படத்தொகுப்பை மேற்பார்வையிடுகிறார்,பி.எல்.சுபேந்தர் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.சுதேஷ் சண்டை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார்.
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப்படத்தின்,முதல்பார்வை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,இந்தப்படக்குழுவினர் சென்னையில் மார்ச் 2 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவுடன் திரைத்துறையில் முக்கிய இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொண்டு பேசினர்.
இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது..
ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் மூலம் அற்புதமான வாழ்வியலை சொன்ன இயக்குநர்.
இந்தப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. எனினும்,இயக்குநர் இந்தப்படத்திலும் அழகான வாழ்வியல் சார்ந்த கதையை கையாண்டிருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.இந்தப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கும் ரமேஷ்பாபு சாருக்கு வாழ்த்துகள்.சிறிய பட்ஜெட் என்றாலும்,நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்துவரும் யோகிபாபு,சினிமா மீதுள்ள ஆர்வத்தால் மட்டுமே நடிப்பில் கவனம் செலுத்திவரும் லவ்லின் ஆகியோருக்கு வாழ்த்துகள்.இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா,எந்த பட்ஜெட் படமென்றாலும் தனது உழைப்பை பலமடங்கு கொடுக்கக்கூடியவர். அவரது ரீ-ரெக்கார்டிங்கிற்கு நான் மிகப்பெரிய இரசிகன், அவருக்கும் வாழ்த்துகள்.இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை என்றார்.
இயக்குநர் வசந்த பாலன் பேசும்போது…..,
கெணத்த காணோம்- வெறும் காமெடி வசனமாக உருவாகி தற்போது அரசியல் பேசும் வாக்கியமாக மாறி இருக்கிறது.கெணத்த காணோம் வரிசையில் ஆற்றை காணோம்,ஏரியை காணோம் என இதை சுற்றிய அரசியல் ஆழமாகி இருக்கிறது.இந்தப்படத்தில் தண்ணீர் பஞ்சம் உள்ள கிராமத்தைத்தேடி படக்குழு தமிழ்நாடு முழுக்க பயணம் செய்துள்ளனர்,எனினும் அதை கண்டுபிடிக்க இயலவில்லை.ஒருக்கட்டத்தில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும்போது அந்த கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை,இதுதான் தமிழ்நாடு.நான் இந்தியா முழுக்க பயணம் செய்திருக்கிறேன்,ஆனால் இத்தகைய நிலை மற்ற மாநிலங்களில் இல்லை. நடிகர் யோகிபாபுவுக்கு மண்டேலா எப்படி அரசியல் சார்ந்த அழுத்தமான படமாக அமைந்ததோ,அதேபோல் இந்தப்படமும் அவருக்கு இருக்கும் என்பது படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது.படம் இயக்கும்போது ஒரு இயக்குநர் மரணிப்பது பற்றி நிறைய பேசியிருக்கிறோம்,ஆனால் அதன் வலி இந்தமேடையில் உணரமுடிகிறது.இயக்குநர் சுரேஷ்சங்கையா “கெணத்த காணோம்” என்ற ஆழமான படைப்பை முன்னிறுத்தி இங்கிருப்பதாகவே பார்க்கிறேன்.இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
விநியோகஸ்தர் குகன் பேசும்போது….
கெணத்த காணோம் என்ற தலைப்பு நடிகர் வடிவேலுவின் வசனமாக தொடங்கி இதில் யோகிபாபு சார் நடித்திருப்பது நல்ல காம்பினேஷன்.இந்தப்படம் காமெடி டிராமா கதையம்சம் கொண்டிருக்கிறது.இத்தகைய திரைப்படங்கள் இரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று வருகிறது.இதற்கு சமீபத்திய உதாரணம் தாய்கிழவி திரைப்படம்தான்.இந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் ரமேஷ்பாபு மற்றும் ஜெகன் அண்ணாவுக்கு வாழ்த்துகள்.படத்தின் இயக்குநர் இன்று இங்கு நம்முடனேயே இருப்பதாக நான் நினைக்கிறேன். இயக்குநருக்காக இங்கு மேடையில் அமர்ந்து இருக்கும் இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்போது…
அனைவருக்கும் வணக்கம்,இங்கு முதலில் பேசிய சில இயக்குநர்கள் படத்திற்கு தொடர்புடையவர்களுடன் நன்கு அறிமுகமானவர்கள்.தயாரிப்பாளர் ரமேஷ்பாபுவுடன் நீண்டநாள் பழகியவர்கள்.ஆனால்,எனக்கு அவரை நேற்றுதான் தெரியும்.ஆனால், நீண்டகாலமாக அவரைப்பற்றிய நிறையபேர் பேசி கேட்டிருக்கிறேன்.தன் படங்கள் தவிர்த்து மற்றபடங்களில் பணியாற்றும் உதவி இயக்குநர்களைும் நன்றாக பார்த்துக் கொள்ளக்கூடியவர் ரமேஷ்பாபு.ஒரு இயக்குநர் இல்லாதபோது,அவர் படத்தை பாராட்டி,அவரை கொண்டாடும் தயாரிப்பாளர் கிடைப்பது அரிதிலும் அரிது.அதனை சிறப்பாக செய்யும் ரமேஷ்பாபுவுக்காக இந்தப்படம் நிச்சயம் வெற்றி பெறும். இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது,நடிகர் வடிவேலுவின் வசனம் அரசியல் கூற்றாகி இருப்பதாக தெரிவித்தார்.வடிவேலு இல்லாமல் இன்று தமிழ்சினிமா இல்லை.அவரின் வசனங்கள்தான் இன்று அரசியல் கூற்றாக மாறிவருகிறது.சினிமாவில் யாருக்கும் அட்வைஸ் பண்ணக்கூடாது.அட்வைஸ் சொன்னாலும் கேட்கமாட்டார்கள்,ஏன் அவர்கள் கேட்கமாட்டார்கள் என்றால் ஏற்கனவே வீட்டில் சொல்வதை கேட்காமல்தான் இங்கு வந்திருக்கிறோம் என்றார்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா பேசும்போது…,
அனைவருக்கும் வணக்கம்,இந்தப்படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.இயக்குநர் சுரேஷ் சங்கையா சார் மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ்பாபு சாரை படத்தின் பூஜையின்போது சந்தித்தேன்.படத்தின் கதையை கேட்காமல்தான் இந்தப்படத்திற்குள் வந்தேன்.படத்தின் ரீ-ரெக்கார்டிங்கின்போது தான் எனக்கும் சுரேஷ் சங்கையா சாருக்கும் நல்லபழக்கம் ஏற்பட்டது.அவர் எனக்கு மிகவும் ஸ்பெஷல்.அவர் தற்போது இல்லை என்றாலும்,அவர் இங்கு நம்முடன்தான் இருக்கிறார். அவர் மரணிக்க சரியாக ஒரு வாரத்திற்கு முன் என்னை தொடர்பு கொண்டு,என்னை கோவில் ஒன்றுக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தினார்.அப்போது நான் அவருடன் சென்று,நேரம் செலவழித்தேன்.அதற்குமுன்பு கிட்டத்தட்ட 20 நாட்கள்வரை சரியான உறக்கம் இல்லாமல் இருந்தேன்.அன்றிரவு கோவில் ஒன்றின் அருகே நான் மூன்றுமணி நேரம் உறங்கினேன், அவர் என்னை எழுப்பாமல் என்னுடனேயே இருந்தார். அதன்பிறகு நான் அவரை வீட்டில் விட்டுவிட்டு சென்றேன்.அன்றைய நாள் அவருடன் கழித்தபிறகு எனக்கு நிறைய விஷயங்கள் நடந்தன.அவரின் நேர்மைக்காகவே இந்தப்படம் வெற்றி பெறும்,நன்றி என்று தெரிவித்தார்.
நடிகர் யோகிபாபு பேசும்போது…..
அனைருக்கும் வணக்கம்,இந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ரமேஷ் சாருக்கு நன்றி.சுரேஷ் சங்கையாவை எனக்கு காக்கா முட்டை படத்தில் இருந்தே தெரியும். கிடாயின் கருணை மனு படத்தில் என்னை நடிக்க வைக்க இயக்குநர் சுரேஷ் சங்கையா திட்டமிட்டிருந்தார். ஆனால்,அப்போது எனக்கு தயக்கமாக இருந்தது. முதன்மை பாத்திரம் இல்லை என்றாலும்,வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார்.தேதிகள் சார்ந்த சிக்கல்,மற்ற படங்களில் இருந்ததால் அதுவும் நடக்கவில்லை.இதைத் தொடர்ந்துதான் சுரேஷ் சங்கையா என்னை ஹீரோவாக வைத்து படமெடுக்க வேண்டும் என்று இந்தப்படத்தை கொடுத்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக பார்க்கிறேன்.இயக்குநர் இந்தப்படத்திற்காக நிறைய விஷயங்களை லைவாக செய்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பில் ஷாட்டிற்கு இடையில் பத்துநிமிடங்களில் கதை சொல்லக்கூடியவர்.அடுத்து இந்தப்படம் செய்வோம் என்று கூறுவார்.நல்ல இயக்குநரை நாம் இழந்துவிட்டோம்.ஆனால்,அவர் எப்போதும் நம்முடனேயேதான் இருக்கிறார்.குழந்தை பிறந்த பிறகுதான் அவர் உயிரிழந்தார்.ஏற்கனவே நான் கூறியதைபோல்,அந்த குழந்தையின் படிப்புக்கு நான் உதவுகிறேன்.மேடை ஏறி சாமி இல்லை என்று கூறுவதைவிட மலையேறி சாமி கும்பிடுகிறேன்.நான் வணங்கும் முருகனை நம்பி இந்தப்படம் வெற்றி பெற வேண்டுகிறேன்,நன்றி
இவ்வாறு அவர் பேசினார்.
பேசி முடித்த பின்பு,நடிகர் யோகிபாபு சொன்னது போல்,அந்தக்குழந்தையின் படிப்புச்செலவுக்கு மேடையிலேயே காசோலை வழங்கினார்.











