மாஸ்டர் இறுதிக்கட்டப் பணிகள் திடீர் நிறுத்தம் – காரணம் என்ன?
நடிகர் விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில், விஜய் கல்லூரிப் பேராசிரியராகவும் விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வெளியாகவில்லை.
இப்போது தமிழக அரசு,திரைப்படத்துறையில் படப்பிடிப்புக்குப் பின்பான பணிகளை மேற்கொள்ள அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து மாஸ்டர் பின்னணி பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் எல்லாப்பணிகளையும் நிறுத்திவைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.குறிப்பாக ஃபைனல் மிக்ஸிங் எனப்படும் இறுதிக்கோர்வைப் பணிகளைச் செய்யவே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம்.
அப்பணிகளை முடிக்க இருபது நாட்களிலிருந்து ஒரு மாதம் வரை ஆகுமென்றாலும் இப்போதே அப்பணிகளை நிறுத்தி வைக்கக் காரணம் இருக்கிறதாம்.
திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியாத சூழல் இருக்கிறது. எப்போது திரையரங்குகள் திறந்தாலும் அப்போது பணிகள் தொடங்கினால் சரியாக இருக்கும் என்பதோடு இப்போது படம் முழுமையாகத் தயாரானால் எங்காவது கசிந்துவிடுமோ என்கிற அச்சத்தின் காரணமாகவும் முழுமையாகத் தொகுக்காமல் அப்படியே வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.











