சந்தானம் படத்தில் கமலின் புகழ்பெற்ற பாடல்
அறிமுக இயக்குநர் கார்த்திக்யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் தயாராகி வருகிற படம் டிக்கிலோனா. இந்தப்படத்தில் நடிகர் சந்தானத்தோடு ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை புகழ் அனகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக அறிமுகமான ஷிரின் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
இவர்களோடு யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், அருண் அலெக்ஸாண்டர், இட்டிஸ் பிரசாந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா.அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண் ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ஆர்வி,படத்தொகுப்பு ஜோமின், நடன அமைப்பு சண்டைப்பயிற்சி சுப்பராயன்.கலை இயக்கம் ஏ.ராஜேஷ்
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
பெரிய நட்சத்திர பட்டாளமும் சிறந்த் தொழில்நுட்பக்குழுவும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தியே இப்படம் தயாராகியிருக்கிறதாம்.
இப்படத்தில் சந்தானத்துக்கு மூன்று வேடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூவரும் ஒரு பாடலில் இடம்பெறுவது போலக் காட்சியமைத்திருக்கின்றனர். அந்தச்சூழலுக்கு மிகப்பொருத்தமாக கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெறும் வெச்சாலும் வைக்காம போனாலும் மல்லிவாசம் எனும் பாடல் இருந்திருக்கிறது. அந்தப்பாடலில் குஷ்புவோடு மூன்று கமல்கள் வருவார்கள்.
எனவே அந்தப்பாடலின் உரிமையை இளையராஜாவிடமிருந்து ஒரு பெரும் தொகை கொடுத்து வாங்கியிருக்கிறார்களாம்.வாலி எழுதிய அந்தப்பாடலை மலேசியாவாசுதேவனும் எஸ்.ஜான்கியும் பாடியிருந்தார்கள்.
அந்தப்பாடலை அப்படியே பயன்படுத்தாமல், அதே மெட்டில் புதிய குரல்பதிவு செய்து டிக்கிலோனா படத்தில் இடம்பெறச் செய்திருக்கிறார்களாம்.
கமல் நடித்து பெரும் வரவேற்புப் பெற்ற ஒரு பாடலில் அதேபோல மூன்று சந்தானங்கள் இடம்பெறுவது மிகவும் ரசிக்கத்தக்கதாக அமையும் என்கிறார்கள்.
ஆனாலும் இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுப்பெறும்வரை சந்தானம் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு உள்ளுக்குள் அச்சமாகத்தான் இருக்கும்.











