பிக்பாஸ் நிறுவனத்தைக் கதறவிட்ட கவின் – விவரங்கள்
பிக்பாஸ் உட்பட ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் நிறுவனம் எண்டமோல் நிறுவனம்.
இந்நிறுவனம் தமிழில் திரைப்படங்கள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
முதல்படமாக புதுஇயக்குநர் ஒருவர் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் கவினை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டது.
இதற்கான வேலைகள் தொடங்கி பல மாதங்கள் ஆகிவிட்டன.
தொடக்கத்தில் எப்போது படப்பிடிப்பு தொடங்கப் போகிறீர்கள்? என்று அடிக்கடி விசாரித்துக் கொண்டிருந்திருக்கிறார் கவின்.
பல காரணங்களால் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகிக் கொண்டிருந்திருக்கிறது.
இதனிடையே கவின் நடித்த டாடா படம் வெளியாகி வெற்றி பெற்றது.
அதன்பின், எண்டமோல் நிறுவனம் கவினை தொடர்பு கொண்டு, படப்பிடிப்பு தொடங்கலாம் என்று சொல்லியிருக்கிறது.
அவர்களுக்கு தேதி சொல்லாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தாராம் கவின்.
நிறுவனத்தினர் விடாமல் தேதி கேட்க, அதற்கு, இப்போது என் சம்பளம் அதிகம் அதைத் தருவதாக இருந்தால் நடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
அவருக்கு முதலில் பேசப்பட்ட சம்பளம் ஒரு கோடிக்கும் குறைவாம்.
டாடாவுக்குப் பின் அவர் கேட்டது இரண்டு கோடி என்கிறார்கள்.
அதைத்தர அந்நிறுவனம் தயாராக இல்லை. அதேசமயம் இந்தப்படத்தை விடவும் மனமில்லை.
எனவே, கவினிடம் பேரம் பேசி கடைசியாக ஒன்றரை கோடி கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
அதை கவின் நிராகரித்துவிட்டார். இதனால் அவரைக் கரித்துக் கொட்டியபடி அதே கதை அதே இயக்குநர் வேறு கதாநாயகன் என முடிவு செய்து வேலைகளைத் தொடங்கியிருக்கிறது எண்டமோல் நிறுவனம்.
கவின் என்ன செய்கிறார்?
இரண்டு கோடி சம்பளம் கொடுக்க ஒப்புக்கொண்ட நிறுவனத்தின் படத்தில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.











