அட்லி மீது பாய்ந்த இரசிகர்கள் பழியை ஏற்ற ஷாரூக்கான்
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய்சேதுபதி, நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் உருவாகும் படம் ஜவான்.
இப்படம் ஜூன் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தேதிக்குள் படம் தயாராகாது என்பதால் செப்டம்பர் 7 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன் வெளியான இந்த அறிவிப்பின்போது வெளியிடப்பட்ட புகைப்படத்தில் ஷாருக்கானின் முகம் தெரியவில்லை.
இது அவரது இரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஷாருக்கான் முகத்தைத் திட்டமிட்டே அட்லி மறைத்துவிட்டார் என்கிற சர்ச்சை உருவானது. அதனால் உடனடியாக ஒரு தாமி (செல்ஃபி) வெளியிட்டார் ஷாருக்கான்.
அதைத் தொடர்ந்து இரசிகர்களிடையே உரையாடும்போது அதற்கான விளக்கத்தையும் அளித்திருக்கிறார்.
ட்விட்டர் தளத்தில் ஷாருக்கிடம் பேசுங்கள் ( #AskSRK )எனும் பிரிவில் இரசிகர்களுடன் ஷாருக்கான் உரையாடினார்.
அப்போது,‘ஜவான் ஏன் தாமதமாகிறது?’ என்று இரசிகர்கள் கேட்டனர். அதற்கு, பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க மிக்க படைப்பை வழங்க பட குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை, படக்குழுவினர் அனைவரும் இடைவேளையின்றி பணியாற்றி, தங்களை தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்கின்றனர். தற்போது அனைவரும் தங்களது வேலையை எளிதாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.
‘ஜவானில் எது மிகவும் பிடிக்கும்?’ என்று கேட்ட போது,
என்னைப் பொறுத்தவரை இது ஒரு புது வகையிலான படைப்பு. இயக்குநர் அட்லீ மாறுபட்ட இரண்டு ஷாருக்கானை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் ஜவானை பொருத்தவரை, அட்லீ மற்றும் அவரது குழுவினர் தான் மாஸ். அவர்களின் ஸ்டைல் மற்றும் அணுகுமுறை தான் தன்னை மிகவும் உற்சாகப்படுத்தியது என்றார்.
‘ஜவான்’ பட போஸ்டரில் ஷாருக்கானை ஏன் காணவில்லை?
எனக் கேட்டதற்கு,
அவரது பெயர் மட்டும் போதும் என தயாரிப்பாளர்கள் உணர்ந்ததாகவும், ஜவானில் நடித்திருக்கும் சக நடிகர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று ஷாருக்கான் தெரிவித்தார்.
இதன்மூலம் அட்லி மீது தப்பில்லை நாங்களே அதற்குப் பொறுப்பு என்று பழியை ஏற்றுக்கொண்டார்.
அதன்பின்,நயன்தாராவைப் பற்றிக்குறிப்பிடுகையில்,
அவர் அழகானவர். மிகவும் இனிமையானவர். அவருடன் பணியாற்றுவதற்கு எளிதாகவும், சௌகரியமாகவும் இருந்தது. மிக்க மகிழ்ச்சி என்றார்.
விஜய் சேதுபதி பற்றிக்குறிப்பிடுகையில்,
அடக்கமான மனிதர். சிறந்த நடிகர். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என்றார்.
படத்தின் இயக்குநரான அட்லீ, உங்களை தமிழ் மொழியை கற்க வைத்தாரா? என்று கேட்டபோது, அட்லீயும், அனிருத்தும் இணைந்து, என்னை தமிழில் சில பாடல் வரிகளை பாட வைத்துள்ளனர். நான் அவற்றை சரியாக உச்சரித்திருக்கிறேன் என நம்புகிறேன்
இவ்வாறு அவர் பதிலளித்தார்..











