நாங்கள் தெளிவாக இருக்கிறோம் – மணிமேகலையின் சூடான பதில் மக்கள் பாராட்டு
சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பல ஆண்டுகளாகத் தொகுத்து வழங்கி வந்தவர் மணிமேகலை.இப்போது விஜய் தொலைக்காட்சியில் இருக்கிறார்.
இவர், ஹுசைன் என்பவரை நீண்ட காலமாகக் காதலித்தார். ஆனால், அவருடைய காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவே, டிசம்பர் 6,2017 அன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
தனது திடீர் பதிவு திருமணம் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 6,2017 அன்று,
நானும் ஹுசைனும் இன்று திருமணம் செய்து கொண்டோம். இது ஓர் அதிரடி பதிவுத் திருமணம். என் திருமண விஷயத்தில் என் தந்தையை என்னால் சமாதானப்படுத்த முடியவில்லை. எல்லாம், என் கை மீறிச் சென்றதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஒருநாள் என் தந்தை என்னைப் புரிந்து கொள்வார் என நான் நம்புகிறேன். காதலுக்கு மதமே இல்லை. லவ் யு ஹுசைன். ஸ்ரீராமஜெயம், அல்லா.
இவ்வாறு மணிமேகலை தெரிவித்திருந்தார்.
அப்போது மதங்கடந்த இந்தக் காதல் திருமணத்துக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
ஆனால் சிலர் மட்டும் அவ்வப்போது மத்அ வேறுபாட்டைக் காரணம் காட்டி இவர்களைச் சீண்டுவது வாடிக்கை.
இப்போது, மணிமேகலை ரம்ஜான் நாள் வாழ்த்தைப் பகிர்ந்து கணருடன் தலையில் முக்காட்டிட்ட ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதோடு, முன்ன எல்லாம் ரம்ஜானுக்கு நான் பிரியாணி கேட்பேன் இப்ப எல்லோரும் என்கிட்ட பிரியாணி கேட்கிறாங்க என்று சொல்லியிருந்தார்.
உடனே ஒருவர், எப்படியோ ஒருவழியா மதம் மாற்றிவிட்டான், இதற்குப் பெயர்தான் லவ்ஜிகாத் என்று பதிவிட்டார்.
அதற்கு, ஹேப்பி ரம்ஜான் சொல்றதுக்கு மதம் மாறணுமா? யாரும் இங்கே மதம் மாறல.ஹுசைன் என்னோடு கோயிலுக்கு வருவார்.நாங்கள் ரம்ஜானும் கொண்டாடுகிறோம். நாங்கள் தெளிவாக இருக்கிறோம் உங்கள் குழப்பங்களையெல்லாம் இங்கு கொண்டுவந்து கொட்டாதீர்கள். நன்றி என்று சூடாகப் பதிலளித்திருக்கிறார்.
இதற்காக அவரைப் பலரும் பாராட்டிவருகிறார்கள்.











