நயன்தாராவின் புதிய படம் அறிவிப்பு – ஆர்.ஜே.பாலாஜியுடன் நடிக்கிறார்
நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி, எல்கேஜி படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் பிப்ரவரி 22 ஆம் வெளியான அப்படம் வெற்றி பெற்றது.
ஆனால் இதுவரை அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார் ஆர்.ஜே.பாலாஜி.
இன்று மாலை (நவம்பர் 10) தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
அதன்படி அவருடைய அடுத்த படத்தின் பெயர் மூக்குத்தி அம்மன். பெண் தெய்வத்தின் பெயரில் தயாராகும் இந்தப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
எல்கேஜி படம் போலவே இந்தப்படத்துக்கும் கதை திரைக்கதை வசனம் ஆர்.ஜே.பாலாஜிதான்.
என்.ஜே.சரவணன் என்பவருடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்குநராகவும் ஆகிறார்.
இப்படத்தையும் எல்கேஜி படத்தைத் தயாரித்த ஐசரிகணேஷே தயாரிக்கிறார்.











