சினிமா செய்திகள்

பலம் பெற்ற பாரதிராஜா உயிர் பெற்ற டி.இராஜேந்தர் – திரையுலகுக்கு நல்லதா?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்காக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்டு மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகள் ஏற்கெனவே இருக்கின்றன.

இந்நிலையில், கடந்த ஆண்டு பாரதிராஜா தலைமையில் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்கிற அமைப்பும் டி.இராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்கிற அமைப்பும் உருவாகின.

இவற்றில் பாரதிராஜா தலைமையிலான சங்கத்தில் பல பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர்.

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பின் உருவான தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தொடக்கத்தில் பெரிய அணியாக இருந்தது.

போகப்போக அதில் பொறுப்பிலிருந்த பலர் விலகியதால் மிகவும் பலவீனம் அடைந்திருந்தது.

இந்நிலையில், நேற்றைய அறிவிப்பின்படி பாரதிராஜா சங்கத்துக்குப் பெரும் பலமும் டி.இராஜேந்தர் சங்கத்துக்கு உயிரும் கிடைத்திருக்கிறது.

அந்த அறிவிப்பு என்ன?

புதிதாக இரண்டு சங்கங்கள் உருவானபோதும் இவற்றில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் படம் தயாரித்தால் அதைத் தணிக்கைக்கு அனுப்ப மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தில் இருந்து கடிதம் வாங்கி அதைத் தணிக்கைக்குழுவிடம் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுத்தால்தான் படத்தைத் தணிக்கைக் குழுவினர் பார்ப்பார்கள். சான்றிதழும் தருவார்கள்.

அப்படிக் கடிதம் கொடுக்கும் அங்கீகாரம் புதிய சங்கங்களுக்கு இல்லாமல் இருந்தது.

இதனால் புதிய சங்கங்களில் உறுப்பினர்களாக இருப்போரும் தணிக்கைக் குழுவிடம் கொடுக்க வேண்டிய கடிதத்துக்காக பழைய சங்கங்களை அணுக வேண்டியிருந்தது.

இதனால், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து பாரதிராஜா சங்கத்தில் இருப்பவர்களுக்கு, உங்களை நீக்குவோம் என்று சொல்லி அறிவிக்கை அனுப்பினார்கள்.

இந்நிலையில், புதிய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசை அணுகி தணிக்கைக்குழுவுக்குக் கடிதம் கொடுக்கும் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டார்கள்.

இதை நேற்று இரு சங்கங்களும் அறிவித்துள்ளன.

இதன் விளைவு, இனிமேல் இங்கு உறுப்பினராக இருப்பவர்கள் தணிக்கைக்குழுவுக்கான கடிதம் பெற வேறு சங்கங்களிடம் போய் நிற்க வேண்டியதில்லை.

இதனால், தாய்ச் சங்கம் என்று சொல்லப்படுகிற தேனாண்டாள் முரளி தலைவராக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் வலிமை இழக்கிறது.

நேற்றே டி.இராஜேந்தர் சங்கம் சார்பில் வெளியிடப்படுள்ள அறிவிப்பில், எங்கள் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கைக் கட்டணம் மிகவும் குறைவு, அதோடு எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஃபெப்சி எனப்படும் திரைப்படத் தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்களோடுதான் வேலை செய்யவேண்டும் என்று கட்டாயமில்லை, நீங்கள் உங்கள் விருப்பத்துக்கு யாரை வைத்து வேண்டுமானாலும் வேலை செய்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதுவரை தாய்ச்சங்கம் எனச் சொல்லப்படும் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஃபெப்சி அமைப்பினர் ஒப்பந்தம் போடுவார்கள் அதை அனைவரும் கடைபிடிப்பார்கள். இனிமேல் என்னவாகும்? என்பது போகப்போகத்தான் தெரியும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் ஏற்கெனவே நலிந்திருக்கும் திரைத்துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டால் நல்லது.

மாறாக தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் எனும் முதுமொழிக்கேற்பச் செயல்பட்டால் சோதனைதான்.

Related Posts