சினிமா செய்திகள்

மீண்டும் திமுக ஆட்சி – அச்சத்தில் தமிழ் சினிமா?

தமிழகத்தில் பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியின்போது திரைத்துறையில் திமுக வினர் தலையீடு அதிகமாக இருந்ததாகக் குற்றச்சாட்டு இருந்தது.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் , சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் ஆதிக்கம் இருக்கும் என்கிற அச்சம் திரைத்துறையினர் மத்தியில் இருக்கிறது அல்லது உருவாக்கப்படுகிறது.

இது தொடர்பாக திரையுலகில் பல்லாண்டு அனுபவம் பெற்றவர்கள் கூறுவதாவது…

சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள் வருகிறபோது மற்ற படங்களை வெளியிடவிடமாட்டார்கள், பெரிய கதாநாயகர்களை வற்புறுத்தி தேதி வாங்கி படம் எடுப்பார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

திமுக ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இந்நிறுவனங்களின் படம் வெளியாகும்போது மற்ற படங்கள் வெளியாக யோசிக்கும் என்பதுதான் எதார்த்தம்.

இன்னொரு பக்கம் இப்போதே பெரிய நாயகர்கள் எல்லோரையும் வைத்து சன் பிக்சர்ஸ் படம்
தயாரிக்கிறது. விஜய் மற்றும் கமல் படங்களை எடுத்து நட்டப்பட்டதால் பெரிய கதாநாயகர்கள் பக்கமே போகவேண்டாம் என்று ரெட் ஜெயண்ட் முடிவு செய்துள்ளது.

இதனால் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை ஏதும் இல்லை.

மாறாக, திமுக ஆட்சி அமைந்திருப்பதால் திரைத்துறைக்கு நன்மை நடக்க வாய்ப்பிருக்கிறது.

அரசாங்க ரீதியாக ஏற்கெனவே தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பது போன்ற சலுகைகளை அறிவிக்கலாம். அப்படிச் செய்தால் கூடுதல் நன்மை. இல்லையெனினும் நன்மைதான்.

எப்படியெனில், இதுவரை புதிய படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டாதிருந்த கலைஞர் தொலைக்காட்சி இனி புதுப்படங்களை வாங்க வாய்ப்பிருக்கிறது. அதன்மூலம் பல சிறிய படங்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பயன்பெறுவர்.

அதோடு வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகமீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அம்பேத்குமார் உள்ளிட்டோர் படங்கள் தயாரிப்பில் இறங்குவார்கள். அதுவும் திரைத்துறைக்கு நன்மைதான்.

இப்படி நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறதே தவிர கெடுதலோபாதிப்போ ஏற்பட வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.

Related Posts