பாலன் தி பாய் – திரைப்பட விமர்சனம்
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஆவேஷம் பட இயக்குநர் ஜித்துமாதவன் கதை எழுத இன்னொரு மாபெரும் வெற்றிப்படமான மஞ்ஞுமல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் இயக்கியிருக்கும் படம் பாலன் தி பாய்.
நம்பியவரால் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பயணம்தான் இந்தப்படத்தின் கதை.இந்த ஒருவரிக் கதைக்குள் ஓராயிரம் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய படம்.
நாயகியாக நடித்திருக்கும் ஃபர்சானா பலதிங்கல்,கர்ப்பிணியாக சிறையில் இருக்கிறார்.அங்கேயே குழந்தை பெற்றெடுக்கிறார்.சில வருடங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வரும் அவர்,எவர் மீதும் நம்பிக்கை இல்லாமல் தன் மகனுடன் பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கிறார்.ஒவ்வொரு இடத்திலும் ஓர் அடையாளம்.ஒருகட்டத்தில் ஓரிடத்தில் நிரந்தரமாக வாழ முடிவு செய்கிறார். அங்கு தன் மகனை பள்ளியிலும் சேர்க்கிறார்.
ஆனால்,திடீரென ஒருநாள் அவர் காணாமல் போகிறார்.மகனை காவல்துறை கூட்டிச் செல்கிறது.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் திரைக்கதை.
நாயகியாக நடித்திருக்கும் ஃபர்சானா பலதிங்கல்,படத்தின் மொத்தமும் நாம்தான் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.பாதிக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதியாகவே மாறியிருக்கிறார்.அவருக்காக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளுக்கு நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார்.
சிறுவன் பாலனாக நடித்திருக்கும் ஆதிசேஷன் கே.ஆர்,இந்தவயதிலேயே இப்படி ஓர் நடிப்பா? என்று வியக்குமளவுக்கு நடித்து மனதைக் கலங்க வைத்துவிடுகிறார்.
வளர்ந்த பாலனாக நடித்திருக்கும் ஜினன்,காவலராக நடித்திருக்கும் ஜீன் பவுல் லால்,காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் கிரிஷ் ஏ.டி ஆகியோர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் டொவினோ தாமஸ்.அவரா என்று வியந்து பார்க்கும்படியான தோற்றத்தில் வந்து நன்றாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித்,ஒரு பயணம்தான் கதை என்பதால் காட்சிகளிலும் பயண உணர்வையும் உணர்வுப் பயணத்தையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சுஷின்ஷாம்,இசையால் காட்சிச் சிலைகளின் கண் திறந்திருக்கிறார்.
கொஞ்சம் பிசகினாலும் கடுமையாகப் போரடித்துவிடக் கூடிய வாய்ப்புள்ள படத்தை எதிர்பார்ப்புடன் பார்க்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன்.
மிகப்பெரும் வெற்றி பெற்ற ஜித்துமாதவன் எழுத்துகளை இன்னொரு வெற்றியாளரான சிதம்பரம்,திரையில் இரத்தமும் சதையுமாக ஓடவிட்டிருக்கிறார்.ஒரு எளிய பெண்ணின் பயணத்தின் மூலம் சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றங்களைக் காட்டி வியக்க வைத்திருக்கிறார்.
– இளையவன்













