விமர்சனம்

பியூட்டி – திரைப்பட விமர்சனம்

அழகு என்றால் ஆபத்து என்று மனதில் ஆழமாகப் பதிந்த ஓர் இளைஞனின் விபரீத சிந்தனையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஓர் உளவியல் மருத்துவரின் அணுகுமுறையோடும் அக்கறையோடும் பேசியிருக்கும் படம் பியூட்டி.

அப்பா மகன் என இருவேடங்களில் நடித்திருக்கிறார் நாயகன் ரிஷி. உளச்சிக்கல் உடையவர் வேடத்துக்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார்.காதல்காட்சிகளிலும் இறுக்கமாகவே இருக்கிறார்.

நாயகி கரீனஷா, அழகாக இருக்கிறார். அதுவே திரைக்கதைக்குப் பலமாக இருக்கிறது. நடிப்பிலும் குறைவில்லை.

காயாகபூர், ஆதேஷ்பாலா, சிங்கமுத்து, மனநல மருத்துவர் ஆனந்தன் ஆகியோர் தம் வேலைகளைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

ஆர்.தீபக்குமார் கதையின் தன்மையை முழுமையாக உள்வாங்கி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இலக்கியனின் இசையில் பாடல்கள் கேட்க சுகமாக இருக்கிறது. பின்னணி இசை திரைக்கதைக்குக் கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

உளவியல் சிக்கல்களை மையப்படுத்திய கதையைக் கையிலெடுப்பது கத்திமேல் நடப்பதற்குச் சமம். அதை எளிதாகச் செய்திருக்கிறார் இயக்குநர் கோ.ஆனந்தசிவா.

முதல்பாதியில் சில தடுமாற்றங்கள் இருப்பதுபோல் தோன்றும் இரண்டாம்பாதியில் அவை தடுமாற்றம் இல்லாத தடம் என்பது புலனாகிறது.

பெயருக்கேற்ற படம்.

– சேகர்

Related Posts