சினிமா செய்திகள்

ஷங்கர் மகனை வாழ்த்திய விஜய் மகன் – புதியபடவிழா சிறப்பு

இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஆகிய இரண்டு மகள்களும் அர்ஜித் என ஒரு மகனும் உண்டு.இவர்களில் மகள் அதிதிஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகி சில படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.இப்போது ஷங்கரின் மகன் அர்ஜித்ஷங்கர் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

ஷங்கருடைய மகன் அர்ஜித்தும் திரைத்துறைக்குள் வரவிருக்கிறார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டது.தொடக்கத்தில் இயக்குநர் ஆக வேண்டும் என்கிற எண்ணத்தில் அமெரிக்கா போய் இயக்குநருக்கான படிப்பைப் படித்துவிட்டு வந்தாராம்.அதனால் அவர் இயக்குநராகப் போகிறார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க யாரும் எதிர்பாரா விதமாக அவரும் கதாநாயகன் ஆகவிருக்கிறாராம்.

இதற்காக என் எஸ் டி எனப்படும் நேசனல் ஸ்கூல் ஆஃப் டிராமா நிறுவனத்தில் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டு முறையாகத் தயாராகியிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அர்ஜித்ஷங்கர் நடிக்கும் முதல்படத்தின் தொடக்கவிழா மிக எளியமுறையில் நேற்று நடந்தது.

இந்தப்படத்தை இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அசோக் என்பவர் இயக்கவிருக்கிறார்.இவர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கவிருந்த சிங்கப்பாதை எனும் படத்தை இயக்க ஒப்பந்தமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.அந்தப்படம் நடக்கவில்லை.

இப்படத்தில் அர்ஜித்ஷங்கருக்கு இணையராக கீர்த்திஷெட்டி நடிக்கிறார்.

இப்படத்தை,சுதன் சுந்தரத்தின் பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.கே.வி.துரையின் குட்ஷோ நிறுவனம் முதல்பிரதி அடிப்படையில் தயாரித்துக் கொடுக்கிறது.

இப்படத்தின் தொடக்கவிழா,சென்னையிலுள்ள ஒரு நடத்திரவிடுதியில் நேற்று நடைபெற்றது.

அந்நிகழ்வில்,படக்குழுவினருடன் இயக்குநர் ஷங்கர்,இயக்குநர் எச்.வினோத் உட்பட பலர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் யாரும் எதிர்பாராதவிதமாக வந்த விருந்தினர் இயக்குநர் ஜேசன் சஞ்சய்.ஆம் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்தான்.

அவர் இயக்கியிருக்கும் சிக்மா படம் ஜூலை 31 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.அவர் படம் இயக்கத் தொடங்கியது முதல் இப்போதுவரை வேறெந்த நிகழ்ச்சியிலும் பங்குகொள்ளாதவர்.

இப்போது,இந்தப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு,அர்ஜித்ஷங்கரை வாழ்த்திச் சென்றது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்குகிறது.வேகமாக படத்தை நிறைவு செய்துவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.படம் நிறைவானதும் பொருத்தமான வெளியீட்டுத் தேதி பார்த்து வெளியிடவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இவ்வாண்டு, நிறைய திரைப்பிரபலங்களின் வாரிசுகள் கதாநாயகன் மற்றும் நாயகியாக அறிமுகமாகவிருக்கிறார்கள்.அவர்களில் ஒருவராகக் களமிறங்கும் அர்ஜித்ஷங்கர் வெற்றிபெற வாழ்த்துகள்.

Related Posts