மீண்டெழுந்த சசிகுமார் – திரையுலகம் வியப்பு
இயக்குநர் நடிகர் சசிகுமார் கடந்த பத்தாண்டுகளாகத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவருடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில், 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி சசிகுமார் தயாரித்து இயக்கிய ஈசன் படம் வெளியானது.
அதன்பின், சமுத்திரக்கனி இயக்கிய போராளி, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன், பாலுமகேந்திரா இயக்கி நடித்த தலைமுறைகள், பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த தாரைதப்பட்டை, பிரசாத்முருகேசன் இயக்கத்தில் கிடாரி, சோலைபிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்த பலேவெள்ளையத்தேவா, கடைசியாகக் கொடிவீரன் ஆகிய படங்களைத் தயாரித்தது.
சசிகுமாரின் அத்தைமகன் அசோக்குமார். இவர் திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்தார். கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக நவம்பர் 21,2017 அன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சசிகுமார் அதன்பின் படத்தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தார்.
நடிக்கும் படங்களில் வாங்கும் சம்பளத்தைக் கொண்டு கடன்களைக் கட்டி வந்தார்.இப்போது கடன் சிக்கல்களிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டாராம்.
அதனால் அவருடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் மீண்டும் படம் தயாரிக்கவிருக்கிறார்.
கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் தொரட்டி. அந்தப்படத்தின் இயக்குநர் மாரிமுத்துதான் கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்கவிருக்கிறாராம்.
அப்படத்தில் நாயகனாக நடிப்பவர் சசிகுமார்தான். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.
அசோக்குமாரின் தற்கொலையால் உடைந்து போனாலும் கலங்கி நிற்காமல் பல படங்களை ஒப்புக்கொண்டு நடித்து கடன்களைக் கட்டி மீண்டெழுந்திருக்கும் அவரை திரையுலகம் வியப்புடன் பார்க்கிறது.











