சந்தானம் படம் ஒரு வாரம் தள்ளிப்போனது – ஏன்?
இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’.
சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு இணையராக பிரியாலயா எனும் அறிமுக நாயகி நடித்திருக்கிறார்.
இமானின் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியுள்ளார். பாடல்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.
ஒளிப்பதிவு – ஓம் நாராயண், படத்தொகுப்பு – எம். தியாகராஜன்,
கலை – எம். சக்தி வெங்கட்ராஜ், சண்டைப் பயிற்சி – மிராக்கிள் மைக்கேல், நடனம் இயக்கம் கல்யாண் – பாபா பாஸ்கர்.
பிரபல நிதியாளர் மதுரை அன்பு தயாரித்துள்ள இந்தப்படம் மே 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திடீரென வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி வைத்துவிட்டார்கள். இப்போது மே 17 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏன் இந்த திடீர் மாற்றம்?
மே 3 ஆம் தேதி வெளியான் அரண்மனை 4 படம் நன்றாகப் போகிறது. அது இரண்டாவது வாரமும் பல திரையரங்குகளில் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.
அதோடு, மே 10 ஆம் தேதி அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு கவின் நடித்துள்ள ஸ்டார் உட்பட பல படங்கள் வெளியாவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதோடு ஓர் ஆங்கிலப்படமும் வெளியாகவிருக்கிறது.
எனவே,அறிவித்தபடி மே 10 ஆம் தேதியே வந்தால் நல்ல திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் வரும்.
அதேநேரம் மே 17 ஆம் தேதி வருமென்று எதிர்பார்க்கப்பட்ட விஜய்சேதுபதியின் மகாராஜா வெளியாகவில்லையாம்.
எனவே மே 17 ஆம் தேதி வந்தால் தனியாக வரலாம் நல்ல வசூலைப் பெறலாம் என்று விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
அதை தயாரிப்பாளர் அன்புச்செழியன் ஏற்றுக்கொண்டாராம். நாம் படமெடுப்பது இலாபம் சம்பாதிக்கத்தான் ஒரு வாரம் தள்ளி வந்தால் அது நிச்சயம் எனும்போது தாரளமாகத் தள்ளி வரலாம் என்று சொல்லியிருக்கிறார்.
தயாரிப்பாளரின் இந்தக்கருத்தை நாயகன் சந்தானமும் ஏற்றுக்கொண்டாராம்.
எனவே, மே 17 வெளியீடு என்று அறிவித்துவிட்டார்கள்.
வெளியீட்டுத் தேதியில் கவுரவம் பார்த்து பலர் பல சிக்கல்களை உருவாக்குவார்கள். அவர்களுக்கெல்லாம் இந்நிகழவு ஒரு பாடமாக இருக்கும் திரையுலக அனுபவசாலிகள் கூறுகின்றனர்.











