அண்ணாத்த படத்தால் ஆனந்தம் விளையாடும் வீடு படத்துக்கு ஏற்பட்ட சிக்கல் – தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் பேட்டி
கெளதம்கார்த்திக், சேரன், சரவணன்,விக்னேஷ், செளந்தர்ராஜன்,சினேகன், ஜோ மல்லூரி, சிங்கம்புலி, டேனியல்பாலாஜி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் நடித்துள்ள படம் ஆனந்தம் விளையாடும் வீடு. நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இந்தப்படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பாக பி.ரங்கநாதன் தயாரித்துள்ளார்.
படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகளில் இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் பி.ரங்கநாதனிடம் ஒரு பேட்டி.
1.உங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்….?
நான் தயாரிப்பு நிர்வாகியாக நிறையப்படங்களில் பணியாற்றினேன். அதன்பின், தமிழ்ப்படங்களின் ஓவர்சீஸ் வியாபாரத்தில் இறங்கினேன். அவற்றிற்கடுத்து அடுத்த சாட்டை உட்பட பல படங்களின் தமிழ்நாடு விநியோக உரிமை பெற்று வெளியிட்டேன்.இந்த அனுவங்களைக் கொண்டு படத்தயாரிப்பில் இறங்கினேன்.
2. முதல்படம் தர்மபிரபு. அதுபற்றி…?
முதல்படமே நல்ல கதையம்சத்துடன் அமைந்தது. அதை நம்பித்தான் தயாரிப்பில் இறங்கினோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிடப் பெரிய வெற்றியடைந்தது.அதனால் உற்சாகம் அடைந்தோம்.
3.ஆனந்தம் விளையாடும் வீடு படம் அமைந்தது பற்றி…?
வித்தியாசமான கதையம்சங்கள் கொண்ட படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. தர்மபிரபு படத்துக்கு அடுத்து பல கதைகளைக் கேட்டும் திருப்தி வரவில்லை.ஏழு அண்ணன் தம்பிகள் அவர்களுக்குள் நடக்கும் நல்லது கெட்டதுகளை அடிப்படையாகக் கொண்ட இந்தக்கதையைக் கேட்டதும் ஒரு நம்பிக்கை வந்தது. படத்தைத் தொடங்கி இப்போது வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
4. படப்பிடிப்பு அனுபவங்கள் எப்படியிருந்தது.?
படத்தில் ஏராளமான நடிகர்கள். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து படப்பிடிப்பு நடத்துவது பெரும் சவால்.அதை வெற்றிகரமாகச் செய்துவிட்டோம். திண்டுக்கல் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தபோது ஏழெட்டு கேரவன்கள் ஏராளமான கார்கள் நிற்பதைப் பார்த்து இது இந்திப்படத்தின் படப்பிடிப்பா? என்று கேட்டார்கள். அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.
5.சவால் என்று எதனைச் சொல்கிறீர்கள்.?
நிறைய நடிகர்கள். எல்லோரும் ஒரு காட்சியில் இருக்கவேண்டும் என்கிற நிலையில் அதில் ஒரு நடிகர் தவறினாலும் அந்தக் காட்சி எடுக்கமுடியாமல் போகும். அப்படிப் பல நிகழ்வுகள் நடந்தன. எல்லா நடிகர்களும் பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அவர்களின் தேதிகள் பெற்று ஒருங்கிணைத்ததுதான் சவால்.
6.இதில் குறிப்பிடத்தக்க நிகழ்வு ஏதேனும் நடந்ததா?
இந்தப்படத்தில் யோகிபாபுவுக்கு ஒரு வேடம் இருந்தது, அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால், அண்ணாத்த படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டதால் இந்தப்படத்தில் அவரால் நடிக்கமுடியாமல் போனது. அவருக்குப் பதிலாக மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார்.

7.ஆக்ஷன் எனச்சொல்லப்படும் சண்டைக்கதைகள் வியாபார ரீதியாகப் பாதுகாப்பானவை என்று சொல்லப்படும். நீங்கள் குடும்பக்கதையைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
குடும்ப உறவுகள் பற்றிய உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பு உண்டு. கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களின் வெற்றி சமீபத்திய உதாரணங்கள். அவை கொடுத்த நம்பிக்கையில் இப்படத்தைத் தயாரித்திருக்கிறேன்.
8.உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை பணம் கடன் தரும் ஃபைனான்சியர்களுக்கு இருக்கிறதா? அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
பணம் போடுகிறவர்கள், வாங்கி வெளியிடுபவர்கள் ஆகிய எல்லோரும் இந்த ஹீரோ படமா? அதற்கு இவ்வளவு மதிப்பு என்று கணக்கிடுவார்கள். இந்தப்படத்தைப் பொறுத்தவரை அந்தக்கணக்கை மீறிச் செல்வழித்திருக்கிறோம். பணம் கொடுப்பவர்கள் படத்தை மட்டுமின்றி என்னைப்பற்றியும் என்னுடைய திரைப்பயணம் பற்றியும் தெரிந்தவர்கள் என்பதால் நம்பிச் செய்கிறார்கள்.
9.திரைத்துறையில் தயாரிப்பாளர்கள் மட்டும் பாவப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிற காலம், ஏவிஎம் போன்ற பெரிய நிறுவனங்களே தயாரிப்பை விட்டு ஒதுங்கியிருக்கிறார்கள். நீங்கள் துணிந்து இறங்கியது எப்படி?
சினிமா மீதான காதல்தான் இந்த முடிவுக்குக் காரணம். அதே சமயம், என்னைப் பொறுத்தவரையில் சரியான திட்டமிடலும் அதை முறையாகக் கடைபிடித்தலும் இருந்தால் சினிமாவும் நல்ல தொழில்தான்.
10.திரைப்பட வியாபார எல்லைகள் விரிவடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே?
ஆமாம், இப்போது ஓடிடி உள்ளிட்ட் டிஜிட்டல் வியாபாரம், இந்தி டப்பிங் வியாபாரம் ஆகியன நம்பிக்கையுட்டும் விதமாக இருக்கிறது.
11. இப்பட வெளியீடு எப்போது?
நவம்பர் மூன்றாம் வரத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டு வேலைகள் செய்துகொண்டிருக்கிறோம்.
12. இப்பட வியாபாரம் தொடங்கிவிட்டதா? எப்படியிருக்கிறது?
தொடங்கிவிட்டோம். மிக நல்ல வரவேற்பு இருக்கிறது. நாங்கள் இப்படத்தின் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை என்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது.
– ராம்











