நொந்துபோன சந்தானம்
சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ஏஜெண்ட் கண்ணாயிரம். இப்படத்தை ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கியிருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு தெலுங்கில் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற திரைப்படம் வெளியானது. நவீன் பாலிஷெட்டி, ஸ்ருதி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.அந்தப் படத்தின் தமிழாக்கம்தான் ஏஜெண்ட் கண்ணாயிரம்.
ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தில் நடிகை ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராம்தாஸ், இந்துமதி, மதன் தட்சிணாமூர்த்தி, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தப்படத்தின் இயக்குநரே படத்தைத் தயாரித்திருக்கிறார்.
அதனால், இந்தப்படத்தின் படப்பிடிப்பை சுமார் நூறு நாட்களுக்கு மேல் நடத்தியிருக்கிறார். ரீமேக் படத்துக்கு எதற்கு இவ்வளவு நாட்கள்?
படப்பிடிப்பு முடித்துவிட்டு அந்தக் காட்சிகளைப் பார்ப்பாராம் இயக்குநர். அதில் திருப்தியில்லை என்று அதே காட்சியை மறுபடி படமாக்குவாராம்.
இப்படியே திரும்பத் திரும்ப எடுத்து நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்திவிட்டாராம்.
முதலில் எதிர்ப்பு தெரிவித்த சந்தானம் போகப்போக, படத்தை ஒப்புக்கொண்டு வந்தாயிற்று அவர் வழியிலேயே போய் முடித்துக் கொடுத்துவிடுவோம் என்று அமைதியாகிவிட்டாராம்
அதன்படியே படப்பிடிப்பு முடிந்து அதற்குப் பிறகான வேலைகள் நடக்கும்போது, எடுத்தவரை போட்டுப்பார்த்தேன், இன்னும் சில்வற்றைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எனவே இன்னும் பத்துநாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டும் அதற்கு நீங்கள் தேதி தரவேண்டும் என்று சந்தானத்திடம் கேட்டாராம்.
அதைக்கேட்டு, சந்தானம் நொந்துபோய்விட்டாராம்.
எதற்காக இவர் இவ்வளவு செலவு செய்கிறார்? இது அவருக்கு நல்லதில்லையே? என்று வருத்தப்பட்டவர், இயக்குநரைக் கூப்பிட்டு இந்தப்படத்துக்கு இவ்வளவு நாள் படப்பிடிப்பு நடத்தியதே அதிகம். இருக்கிற காட்சிகளை வைத்தே படத்தை முடியுங்கள் அதுவே நன்றாக இருக்கும் என்று சொல்லி அனுப்பிவிட்டாராம்.
அதன்பிறகே வெளியீட்டுத்தேதியை அறிவித்துவிட்டு அதற்குண்டான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறாராம் இயக்குநர் மனோஜ்பீதா.











