இன்னும் தொடங்காத கார்த்தி படத்துக்கு இவ்வளவு விலையா? – வியப்பில் திரையுலகம்
கார்த்தி இப்போது நடிக்கும் படம் ஜப்பான். ராஜுமுருகன் இயக்கும் அந்தப்படத்தை டிரீம்வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.
இந்நிலையில் இந்தப்படத்துக்கு அடுத்து கார்த்தி இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
சர்தார் படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
அதோடு, நலன்குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் எனவும் அந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
இவற்றில் அருண்ராஜாகாமராஜ் இயக்கும் படத்தின் திரைக்கதைக்கு இன்னும் இறுதிவடிவம் கொடுக்கப்படவில்லை, அந்தப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியாது.
அதற்குள் அப்படத்துக்கான வியாபாரம் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறதெனச் சொல்கிறார்கள்.
முதலில் இணைய ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வியாபாரம் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறதாம்.
இவை இரண்டுக்கும் சேர்த்து சுமார் ஐம்பத்தைந்து கோடி ரூபாய் கொடுக்க ஹாட்ஸ்டார் நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
விருமன், பொன்னியின்செல்வன், சர்தார் ஆகிய தொடர் வெற்றிகள் இவ்வளவு பெரிய தொகைக்கு வியாபாரம் பேசக் காரணம் என்கிறார்கள்.
எப்படியிருப்பினும் இன்னும் தொடங்கவே இல்லாத ஒரு படத்துக்கு இவ்வளவு விலை கிடைக்கிறது என்பது மற்ற கதாநாயகர்களை உறுத்தியிருக்கிறது. மற்ற தயாரிப்பாளர்களை வியப்பில் விழிபிதுங்க வைத்திருக்கிறது.











