பட்டத்து அரசன் பட இயக்குநர் சற்குணம் பேட்டி
களவாணி,வாகைசூடவா, நய்யாண்டி, மஞ்சப்பை,சண்டிவீரன்,களவாணி 2 ஆகிய படங்களை இயக்கிய சற்குணம், தற்போது இயக்கியிருக்கும் படம் பட்டத்து அரசன்.
ராஜ்கிரண், அதர்வா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தில் நடிகை ஆஷிகா ரங்கநாத் நாயகியாக நடிக்கிறார்.கன்னடத்தில் புகழ்பெற்றிருக்கும் அவர் இந்தப்படம் தமிழில் அறிமுகமாகிறார்.இவர்களோடு ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, பால சரவணன், ஜி.எம்.குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காளே, தெலுங்கு நடிகர் சத்ரு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு இசை ஜிப்ரான், ஒளிப்பதிவு ‘உஸ்தாத் ஹோட்டல்’ புகழ் லோகநாதன் சீனிவாஸ்,படத்தொகுப்பு ராஜா முகமது, கலை இயக்கம் ஆண்டனி.
இந்தப்படம் குறித்து இயக்குநர் சற்குணம் கூறியதாவது…..
நான் ஒரு கபடி விளையாட்டுக்காரன். ஊர்ப்பக்கம் கபடிப் போட்டிகள் நடக்கும்போது பார்க்கப்போவேன். அப்படி ஒருமுறை போனபோது, ஒரு குழுவில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா அப்பா பேரன் உள்ளிட்ட மொத்தக் குடும்பமும் கபடி விளையாடியதைப் பார்த்தேன். வியப்பாக இருந்தது.
அதையே கதைக்கருவாக்கிவிட்டேன்.அதற்குள் தஞ்சை மாவட்டத்தில் வழக்கத்தில் இருக்கும் இரண்டு பாக விசயத்தையும் கதைக்குள் வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறேன். இரண்டு பாக விசயம் என்பது, ஒருவருக்கு இரண்டு மனைவிகள், ஒரு மனைவிக்கு நான்கு குழந்தைகள் இன்னொருவருக்கு ஒரே குழந்தைதான் என்றாலும் அவருடைய சொத்துகளை மனைவிகள் அடிப்படையில் இரண்டு பாகங்களாகப் பிரிப்பார்கள். அதனால் பல சிக்கல்கள் ஏற்படும்.
இவற்றையெல்லாம் வைத்து கூடவே கபடி விளையாட்டு, தாத்தா பேரன் பாசம் ஆகியனவற்றைக் கொண்டு படத்தை எடுத்திருக்கிறோம்.
பட்டத்து இளவரசன் தான் இருப்பார்கள் பட்டத்து அரசன் என்று பெயர் வைக்கக் காரணம் வாலி சாரின் பாடல்தான். பட்டத்து இராசாவும் பட்டாள சிப்பாயும் என்கிற பாடலை எடுத்துக்காட்டாக வைத்து பட்டத்து அரசன் என்றே பெயர் வைத்துவிட்டோம்.
இந்தப்படத்தில், வெற்றிலைத்தோட்டம் அங்கு நடக்கும் செயல்கள் ஆகியனவற்றைப் பின்புலமாக வைத்திருக்கிறோம். அதுகுறித்த காட்சிகள் புதிதாக இருக்கும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜிப்ரான் என்னுடன் சேர்ந்து பணிபுரிந்திருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் நிச்சயம் பேசப்படும் வகையில் இருக்கும்.
படம் நன்றாக வந்திருக்கிறது. எல்லோருக்கும் பிடிக்கும்விதமாக அமைந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.











