சினிமா செய்திகள்

முடியாமல் தொடரும் விடுதலை – தவிக்கும் தயாரிப்பாளர்

விஜய்சேதுபதி, சூரி, கிஷோர் மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார்.

ஆர் எஸ் இன்போடெயிட்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் தொடங்கி இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.தொடங்கும்போது, ஐம்பதிலிருந்து அறுபதுநாட்கள்தாம் படப்பிடிப்பு இருக்குமென்று சொல்லப்பட்டது.

ஆனால், படப்பிடிப்பு நாட்கள் அதிகரித்துக்கொண்டே போனது மட்டுமின்றி புதிய புதிய நடிகர்களும் படத்துக்குள் வந்துகொண்டேயிருந்தார்கள்.

இதனால் தயாரிப்பாளர் புலம்பல் அதிகமானது. அதன் காரணமாக, இப்படத்தை இரண்டு பாகங்களாக்கிக் கொடுக்கிறேன் என்று வெற்றிமாறன் சொல்ல அதைக் கேட்டு அவருடைய பிறந்தநாளையொட்டி விடுதலை படம் இரண்டு பாகங்களாகத் தயாராகின்றன என்று ஆகஸ்ட் மாதம் அறிவித்தார்கள்.

அப்போது விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், இன்னும் படப்பிடிப்பு முடிந்தபாடில்லை.

இன்னும் முப்பதுநாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறதாம். அதற்கான வேலைகளைச் செய்யுமாறு வெற்றிமாறன் சொல்ல தயாரிப்புத் தரப்புக்கு மயக்கம் வராத குறை.

ஆனாலும், தொடங்கியாயிற்று எப்படியாவது முடித்தாக வேண்டுமே? என்பதற்காக அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்களாம்.

இதுவாவது இறுதிக்கட்டப் படப்பிடிப்பாக இருக்குமா? அல்லது இன்னும் தொடருமா? என்று தெரியாமல் கிலி பிடித்திருக்கிறதாம் தயாரிப்புத் தரப்புக்கு.

இதுகுறித்த எந்தக் கவலையும் இன்றி அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது இயக்குநர் குழு.

Related Posts