சினிமா செய்திகள்

வாரிசு படத்தை 5 பகுதிகளில் வெளியிடும் ரெட்ஜெயண்ட் – சிக்கல் தீர்ந்தது

2023 பொங்கலையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு, அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இருபடங்களும் வெளியாகின்றன.

இதனால் தமிழ்த் திரையுலகமே பரபரப்பாக இருக்கிறது.

அதற்குக் காரணம், துணிவு படத்தை உதயநிதி வெளியிடுவதுதான். அவர் ஒரு படத்தை வெளியிடுகிறார் என்றால் அந்தப் படத்துக்குத்தான் திரையரங்குக்காரர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள். அவர் ஆளும்கட்சிக்காரர் என்பதால் அல்ல.

அவர் வெளியிடும் படங்களுக்குத் திரையரங்குக்காரர்களிடம் முன்பணம் எதுவும் கேட்பதில்லையாம். படத்தைக் கொடுக்கிறேன், திரையிடுங்கள், என்ன வருமானம் வருகிறதோ? அதில் உங்கள் பங்கு போக மீதியைச் சரியாகக் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிப் படத்தைக் கொடுத்துவிடுவார்.

இது திரையரங்குக்காரர்களுக்கு மகிழ்ச்சியான விசயம்.

அதனால் ரெட்ஜெயண்ட் வெளியிடும் துணிவு படத்துக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். அப்படத்துக்கு அதிகத் திரையரங்குகள் கிடைக்கும் வாரிசு படத்துக்கு அவ்வளவு திரையரங்குகள் கிடைக்காது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இப்போது வாரிசு படத்தை சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் கோவை ஆகிய ஐந்து விநியோகப் பகுதிகளில் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவது உறுதியாகியிருக்கிறதாம்.

மீதமுள்ள திருச்சி,சேலம், மதுரை, திருநெல்வேலி ஆகிய விநியோகப் பகுதிகளில் முகவர்களை வைத்து வாரிசு படத்தின் தமிழக உரிமையைப் பெற்றுள்ள லலித்குமாரே வெளியிடவிருக்கிறாராம்.

அவரும் ரெட்ஜெயண்ட் போல விநியோக முறையிலேயே படத்தைக் கொடுக்க முன்வந்திருப்பதால் வாரிசு படத்துக்கும் உரிய திரையரங்குகள் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

எப்படியோ எல்லாம் நல்லபடியாக நடந்தால் நல்லது.

Related Posts