சினிமா செய்திகள்

தீபாவளிக்கு ட்யூட் வெளியாகிறது எல் ஐ கே தள்ளிப்போகிறது

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்.ஐ.கே மற்றும் ட்யூட் ஆகிய படங்கள் தயாராகிவருகின்றன.இவற்றில், முதலில் ‘ட்யூட்’ படம் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டது.நேற்று முன் தினம் ‘எல்.ஐ.கே’ படமும் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ‘ட்யூட்’ படம் டிசம்பருக்கு ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்,நேற்று மாலை புதிய அறிவிப்பு ஒன்றை ‘ட்யூட்’ படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மீண்டும் தீபாவளி வெளியீடு என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த தீபாவளி ’ட்யூட் தீபாவளி’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் ஒரேநாளில் இரண்டு படங்களும் வெளியாகுமா? என்கிற கேள்வி எல்லோருக்கும் எழுந்துள்ளது.

என்ன நடக்கிறது?

தெலுங்குத் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு, 30 விழுக்காடு ஊதிய உயர்வு கேட்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி போராட்டத்தை அறிவித்திருந்தது. அவர்களின் கோரிக்கையைத் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை நிராகரித்துவிட்டது. இதனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து நடந்த பேச்சு வார்த்தையில், 22.5 விழுக்காடு ஊதிய உயர்வுக்குத் தொழிலாளர் கூட்டமைப்பு ஒப்புக்கொண்டது.இந்த உயர்வு 3 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். முதல் ஆண்டில் 15 விழுக்காடும், 2 ஆம் ஆண்டில் 2.5 விழுக்காடும் 3 ஆம் ஆண்டில் 5 விழுக்காடும் வழங்க முடிவு செய்யப்பட்டது.

தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை, தெலுங்கு திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு, தெலங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத் தலைவர் தில் ராஜு, கூடுதல் தொழிலாளர் ஆணையர் கங்காதர் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதையடுத்து 18 நாட்களாக நடைபெறாமல் இருந்த படப்பிடிப்பு மீண்டும் நேற்று தொடங்கியுள்ளது.

இதற்கும் ட்யூட் பட வெளியீட்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது.

ட்யூட் படத்தின் படப்பிடிப்பு இன்னும் பத்துநாட்கள் வரை நடத்த வேண்டியிருக்கிறதாம்.அங்கு போராட்டம் நடந்ததால் படப்பிடிப்பு நடத்தவியலாத நிலை.எனவே,அறிவித்தபடி ட்யூட் படம் வராது என்று நம்பி எல் ஐ கே படக்குழு தீபாவளி வெளியீடு என அறிவித்துவிட்டது.

ஆனால்,அங்கு போராட்டம் நிறைவடைந்து படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன. ட்யூட் படத்தின் படப்பிடிப்பையும் நடத்தவிருக்கின்றனர்.

இதனால்,முதலில் அறிவித்தபடி ட்யூட் படம் தீபாவளிக்கு வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.இதன் காரணமாக எல் ஐ கே படம் தள்ளிப் போகும் என்கிறார்கள்.

Related Posts