செஞ்சி – திரைப்பட விமர்சனம்
ஒரு மாபெரும் புதையலைத் தேடிச் செல்லும் கதை. சாகசப் பயணங்கள், குழந்தைகளை ஈர்க்கும் வண்ணம் படமாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தயாராகியிருக்கும் படம் செஞ்சி.
பிரான்சிலிருந்து புதுச்சேரிக்கு வரும் நாயகி சோபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறார்.வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது. ஆனால் அவள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் உள்ளே நுழைகிறார்.அங்கே பழைய புராதன கலைப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன.அங்கே ஒரு ஓலைச்சுவடியைக் கண்டெடுக்கிறாள். அதில் ஏதோ இரகசியம் இருப்பதாகப் படவே தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் ஜாக் ஆண்டர்சனை நாடுகிறாள்.
அதில் ஒரு புதையலுக்கான இரகசிய குறியீடுகள் உள்ளதாக அவருக்குத் தெரிகிறது.சோபியாவுடன் இணைந்து தேட ஆரம்பிக்கிறார்.இரகசிய குறிப்புகளை வைத்துக்கொண்டு கிடைத்த குறியீடுகளின் படி தேட ஆரம்பிக்கிறார்கள். புதையல் வேட்டைக்கான பாதையில் ஐந்து தடயங்கள் உள்ளதாகக் குறிப்புகள் கூறுகின்றன. ஐந்தையும் ஒவ்வொன்றாக அடைந்து ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று இறுதியில் அந்தப் புதையலை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் செஞ்சி படத்தின் கதை.
புதையல் வேட்டை ஒரு பக்கம் நகரும் போது,இன்னொரு பக்கம் ஐந்து சிறுவர்கள் ஊருக்குள் அடிக்கும் லூட்டியைக் காட்டிச் சற்று நேரம் கதை நகர்கிறது. அவர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இரண்டாவது பாதியில் தொடர்பு படுத்துகிறார் இயக்குநர். புதையல் தேடுவதற்கான படிநிலைகளில் ஒரே நட்சத்திரத்தில் அதுவும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஐந்துபேர்தான் அந்தப் புதையலை எடுப்பதற்குத்தகுதியானவர்கள் என்று ஒரு நிபந்தனை வருகிறது.அளவில்லாமல் சுட்டித்தனம் செய்யும் அந்தச் சிறுவர்கள் பெற்றோர்களால் தண்டிக்கப்படவே வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் காடு மேடு எனச் செல்லும் பாதையில் புதையல் இருக்கும் இடத்தை அடைகிறார்கள்.
இந்தப் படத்தில் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இயக்குநர் கணேஷ் சந்திரசேகர் நடித்துள்ளார்.வசன உச்சரிப்பில் அவர் இன்னமும் தேறிவர வேண்டும்.ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வசனம் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.
வெளிநாட்டிலிருந்து வரும் ஆங்கிலேயப் பெண்மணியாக ரஷ்ய நடிகை கெசன்யா நடித்துள்ளார். இயக்குநரை விட அந்த நடிகை மிகச்சிறப்பாக நடித்து உள்ளார்.தோற்றத்திலும் உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் அனுபவம் தெரிகிறது.
படத்தில் சுட்டித்தனம் செய்யும் அந்த ஐந்து சிறுவர்களும் மாஸ்டர். சாய் ஸ்ரீனிவாசன்மாஸ்டர் தர்சன் குமார்மாஸ்டர் விதேஷ் ஆனந்த்மாஸ்டர் சஞ்சய்பேபி தீக்ஷன்யா மனதில் பதிகிறார்கள்.படத்தில் மூன்று பாடல்கள் தேடல் தேடு என்ற பாடல்,தங்கப் புதையலைக் கண்டுபிடித்த பிறகு பாடும் இது தங்கம் என்கிற பாடல் சிறுவர்களைக் கவரும். பின்னணி இசையில் இசையமைப்பாளர் எல்.வி.முத்து கணேஷ் பளிச்சிடுகிறார்.
படத்தில் நடித்துள்ள நடிகர்களை விடவும் படத்துக்குப் பெரிதாகப் பலமாக அமைந்துள்ளது படத்தில் வரும் இடங்கள்தாம். பெரும்பாலும் கல்லார் காட்டுப்பகுதியில் படமாகி உள்ளது.கதைப்படி செஞ்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி , கல்லார் என்று நிகழ்விடங்கள் வருகின்றன.
காட்சிகள் செஞ்சி தொடங்கி பல்வேறு நிலப்பகுதிகளிலும் படமாகி உள்ளது.அந்தக் காற்று செதுக்கிய சிற்பங்களாக இருக்கும் அந்தப் பாறைகள் நடுவே சென்று சந்து பொந்து இடுக்கு வழியில் எல்லாம் புகுந்து புறப்பட்டு உள்ளது கேமரா. ஒளிப்பதிவாளர் ஹரிஸ் ஜிண்டேவுக்குப் பாராட்டு.
காதல் காட்சிகள், டூயட், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் ஆகிய எதுவும் இல்லாமல் இப்படம் உருவாகி உள்ளது பெரிய ஆறுதல்.
நமது வரலாறு புதைந்து கிடக்கும் இடங்களைத் தேடித்தேடி படமாக்கி இருக்கிறார்கள்.அப்படிப்பட்ட நிலக் காட்சிகளைப் பார்க்கும் போது நமது தொன்மங்கள் மீது நமக்கு ஆர்வம் வந்து விடுகிறது. மீண்டும் வரலாற்றைப் புதுப்பித்துக் கொள்கிற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.
சிறுவர்கள் அடிக்கும் லூட்டிகள் சம்பந்தப்பட்ட நீளமான காட்சிகளுக்கு சற்றுக் கத்திரி போட்டிருக்கலாம்.அதே சமயம் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் முதிர்ச்சி தெரியவில்லை.மேலும் சில காட்சிகளை நேர்த்தியாக்கி இருந்தால் படம் மேலும் மேம்பட்டிருக்கும்.
நமது பழங்கால வரலாற்று உணர்வை வரவழைக்கும் முயற்சியாக உருவாக்கிய விதத்தில் செஞ்சி படம் வெற்றி பெற்றுள்ளது.குறைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அந்த நிலக்காட்சிகளுக்காகவே படத்தை இரசிக்கலாம்.
– சரவணன்












