விமர்சனம்

யூகி – திரைப்பட விமர்சனம்

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பிரதாப்போத்தன், ஒரு பெண்ணைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தும் நரேனை அணுகுகிறார். நரேன் அந்த வழக்கைக் கையிலெடுத்து அந்தப் பெண்ணைத் தேடும் அதேநேரம் சிபிஐ அதிகாரி நட்டியும் அந்தப் பெண்ணைத் தேடுகிறார்.

யார் அந்தப் பெண்? எதற்காகத் தேடுகிறார்கள்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம், யூகி.

துப்பறியும் நிபுணர் நரேன் மற்றும் அவரது குழுவில் உள்ள ஆத்மியா உள்ளிட்டோர் உண்மையிலேயே அந்தத் துறையில் பணியாற்றியவர்கள் போல் அவ்வளவு இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

காவல்துறை உதவி ஆய்வாளர் என்று சொல்லிக்கொண்டு வரும் கதிரின் பாத்திரப்படைப்பும் அதில் அவருடைய நடிப்பும் படத்தை வேறு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது.

சிபிஐ அதிகாரியாக வரும் நட்டி,தன் அனுபவ நடிப்பால் அந்த வேடத்தை இரசித்துப் பார்க்க வைத்திருக்கிறார். 

சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் ஆனந்தி, தன் முத்திரையைப் பதித்திருக்கிறார்.

வினோதினி, ஜான் விஜய் உள்ளிட்டோரும் தங்கள் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

துப்பறியும் கதைகளுக்கேயுரிய திரைக்கதை படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

உயர்தட்டு மனிதர்கள், சாமானிய மனிதர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போடும் விசயங்களை மிக அலட்சியமாகச் செய்கிறார்கள். அவர்களுக்குப் பாடம் புகட்டும் கதையும் அதற்கேற்ற திரைக்கதையும் சரியாக அமைந்திருக்கிறது. 

படம் தொடங்கி அரைமணி நேரத்தில் கதிரும் பவித்ராவும் காதல் பாட்டுப் பாடுவது சலிப்பைத் தந்தாலும் அது எதற்கு? என்பதற்கு க்ளைமாக்சில் விடை வைத்து பாராட்டைப் பெறுகிறார் இயக்குநர் ஜாக்ஹாரிஸ்.

நரேன், நட்டி, கதிர் ஆகிய மூவரும் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். 

Related Posts