Uncategorized விமர்சனம்

சாகுந்தலம் – திரைப்பட விமர்சனம்

சாகுந்தலா கதையில், சாகுந்தலா விஸ்வாமித்திர முனியர் மூலம் மோனகாவுக்கு பிறந்த குழந்தை. பிறக்கும்போதே ஆதரவற்றவளாக இருக்கும் சாகுந்தலாவை கண்வ மகரிஷி தனது சொந்த மகளாக வளர்க்கிறார்.

சாகுந்தலா வளர்ந்து பெரியவளாகிறாள். அப்போது ஒருநாள், ஹஸ்தினாபுரத்தின் அரசன் துஷ்யந்தன் கண்வ மகரிஷியின் ஆசிரமத்திற்கு வருகிறான். சாகுந்தலாவைப் பார்த்ததுமே அவள் மேல் காதல் வயப்படுகிறான். சகுந்தலாவும் துஷ்யந்துவை காதலிக்கிறாள்.இருவரும் கந்தர்வர்களாக திருமணம் செய்து கொள்கிறார்கள். உடல் ரீதியாக அவர்களுக்குள் நெருக்கம் ஏற்படுகிறது. மறுநாள், துஷ்யந்தன் ஹஸ்தினாவுக்குத் திரும்புகிறான். விரைவில் திரும்பி வந்து சாகுந்தலாவை அரண்மனைக்கு அழைத்துச் செல்வதாக அவர் உறுதியளிக்கிறார். இதற்கிடையே, சாகுந்தலா கருவுறுகிறாள்.

அதன்பின், துஷ்யந்தனைத் தேடி ஹஸ்தினாவுக்கு சாகுந்தலா செல்கிறாள். ஆனால், துர்வாச மகரிஷியின் சாபத்தால் துஷ்யந்தன் சாகுந்தலாவை மறந்துவிடுகிறார். அனைவரும் கூடியிருக்கும் அவையில், `நீ யார் என்றே எனக்குத் தெரியாது` என்று கூறி சாகுந்தலாவை அவமானப்படுத்தி விடுகிறார்.

அவமானத்துடன் அங்கிருந்து சாகுந்தலா வெளியேறுகிறாள். அதன் பின் என்ன நடந்தது? துஷ்யந்தனுக்கு தனது கடந்த காலம் மீண்டும் நியாபகத்துக்கு வந்ததா? சாகுந்தலாவை மீண்டும் எப்பது, எப்படி அவர் சந்தித்தார்? போன்ற கேள்விகளுக்கு விடைகளை கொண்டதே காளிதாசரின் அபிஞா சாகுந்தலம்.

இந்தக்கதையை அப்படியே திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் குணசேகர்.

சாகுந்தலாவாக சமந்தாவும்,துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்திருக்கிறார்கள்.

சமந்தாவுக்கு இது வாழ்நாள் படம். உருகி உருகிக் காதலிக்கும் காதலி, தன்மதிப்பைச் சீண்டிப்பார்த்ததும் துடிக்கும் போராளி மட்டுமின்றி அனைத்துவிதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய வேடம். அதை நன்றாகச் செய்து படத்தை இலகுவாக்குகிறார்.

தேவ்மோகனும் அரசருக்குரிய கம்பீரத்துடன் இருக்கிறார். காதல்காட்சிகள் நன்று.

அல்லுஅர்ஜுனனின் மகள் அல்லு அர்ஹா, அதிதிபாலன், சச்சின்கடேகர், கபீர்பேடி, மோகன்பாபு, பிரகாஷ்ராஜ், மதுபாலா உட்பட பலர் படத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் அவரவர் வேலையைச் செய்திருக்கிறார்கள்.

சேகர் வி.ஜோசப்பின் ஒளிப்பதிவும் கணினி வரைகலைக் காட்சிகளும் புதிய காட்சி அனுபவங்களைக் கொடுக்கின்றன.

மணிசர்மாவின் இசையில் பாடல்களிலும் பின்னணி இசையிலும் சரித்திர வாசம்.

தெரிந்த கதையை வைத்துக் கொண்டு திரைப்படம் எடுக்கும்போது சந்திக்கும் எல்லா ஆபத்துகளையும் இயக்குநர் குணசேகர் சந்தித்திருக்கிறார்.

பல இடங்களில் படம் மெதுவாகப் போவது போன்ற உணர்வு மட்டுமின்றி நாயகியின் பார்வையில் எழுதப்பட்ட கதையை வில்லனின் பார்வையில் சொல்லியிருப்பதையும் தவிர்த்திருந்தால் திகட்டத் திகட்ட ஒரு காதல் படத்தைப் பார்த்த அனுபவம் கிட்டியிருக்கும்.

– சுமன்

Related Posts